நடிகர் ஜீவா நடித்துள்ள ‘கொரில்லா’ திரைப்படத்தில் நிஜ சிம்பான்ஸியை நடிக்க வைத்ததற்கு பீட்டா இந்தியா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆல் இன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் டான் சாண்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும், சதீஷ், ராதாரவி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ‘காங்’ என்ற கதாபாத்திரத்தில் சிம்பான்ஸி குரங்கு ஒன்று நடித்துள்ளது. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் நிஜ சிம்பான்ஸியை நடிக்க வைத்ததற்கு சர்வதேச விலங்கு ஆர்வலர் அமைப்பான பீட்டா, எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும், ஜீவா நடித்துள்ள ‘கொரில்லா’ படத்தை நிராகரிக்க 5 முக்கிய காரணங்களை பீட்டா அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், ‘தொலைக்காட்சி, சினிமா மற்றும் விளம்பரப் படங்களுக்காக பயன்படுத்தப்படும் விலங்குகள் பிறந்தவுடனே தாயிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. காட்சிகள் சில நிமிடங்கள் என்றாலும், வாழ்நாள் முழுவதும் விலங்குகள் துன்புறுத்தப்படுகிறது. கூண்டுக்குள அடைத்து வளர்க்கப்படும் விலங்குகள் மன உளைச்சலுக்கு ஆளாகி ஆக்ரோஷம் ஆகின்றன. திரைப்படங்களில் நிஜ விலங்குகளை பயன்படுத்துவது தேவையில்லாதது. இதன் பாதிப்பு விலங்குகளுக்கு எப்போதும் இருக்கும்’ என பீட்டா அமைப்பு பட்டியலிட்டுள்ளது.
ஏற்கனவே, தாய்லாந்து நாட்டில் ‘கொரில்லா’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது, நிஜ சிம்பான்ஸிக்கு பதிலாக ஹாலிவுட் படங்களைப்போல சிஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள் என பீட்டா இந்தியா அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.