இயக்குனரின் வெற்றிமாறனின் கருத்து குறித்து இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்திருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் அடையாளங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்படுகின்றன என்றும் அவற்றினை திராவிட சித்தாந்தம் பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இதன் தொடர்ச்சியாக திருவள்ளுவருக்கு காவி அணிவிக்கப்படுவதாகவும், ராஜராஜ சோழன் இந்து அரசனாக மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டு, இப்படியான பல வழி நிலைகளிலும் தமிழ் அடையாளங்கள் எடுக்கப்படுகின்றன என்று கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து தற்போது இயக்குனர் பேரரசு தெரிவித்திருக்கும் கருத்து பரவலாகி வருகிறது.
படவிழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசுவிடம் இதுகுறித்து பேசப்பட்டபோது, “ராஜராஜ சோழன் இந்து அல்லாமல் கிறிஸ்தவரா? கடவுளை கும்பிடாதவர்கள் எதற்கு இதைப் பற்றி பேச வேண்டும்? அப்படி என்றால் கோவிலுக்கு வாருங்கள்.. சாமி கும்பிடுவோம்.. நீங்கள் சைவமா? வைணவரா? இல்லை சாமி கும்பிடாவர் நீங்கள் என்றால், நீங்கள் ஏன் இதைப் பற்றி பேசுகிறீர்கள்? இந்தியா ஒரே நாடாக இருக்கிறது.
அதற்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் தனித்தனி மாகாணங்களாக இருந்தது. அதனால் இந்தியா இல்லை என்று சொல்ல விட முடியுமா? அப்படி பார்த்தால் தமிழ்நாடும் சேர சோழ பாண்டிய நாடாக இருந்தது. அதனால் தமிழ்நாடு இல்லை என்று சொல்ல விட முடியுமா? ஒரு சௌகரியத்துக்காக ஒன்றிணைத்து வைத்திருக்கிறோம். பிரிவினை நல்லதா? இணைந்து இருப்பது நல்லதா? கடவுளை கும்பிடாதவர்கள் என காட்டிக்கொண்டு இப்படியெல்லாம் பேசுவது போலி நாத்திகம்” என்று இயக்குநர் பேரரசு பேசினார்.