சென்னையில் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரும் க்ரைம் பிராஞ்ச் போலீஸாரால் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக திரைத்துறை பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக பேசியுள்ளனர்.
அதன்படி பாடகி சின்மயி, நடிகை கௌரி கிஷன், நடிகை லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, பாடலாசிரியர் மற்றும் எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் என பலரும் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கண்டனங்களை தெரிவித்ததுடன் குற்றம் சாட்டப்பட்டுவருக்கு தக்க தண்டனை வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுபற்றி நடிகர் விஷால் கொந்தளிப்பான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த ட்வீட்டில் “#PSBB ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் என்னை அச்சுறுத்துகிறது மற்றும் இப்படியான பள்ளி மூடப்பட வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது, பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்படவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எனது நண்பர் அன்பில் மகேஷை (தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்) நான் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது என்பதற்காக பள்ளி கல்வித்துறை இது தொடர்பாக மிகவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் இந்த தலைப்பை ஒரு வகுப்புவாத பிரச்சினையாக மாற்றுகிறார்கள் என்பது மற்றுமொரு அவமானம். மாணவர்களை உண்மையில் துன்புறுத்திய அந்த நபர் (ஆசிரியர்) வருங்கால ஆசிரியர்களுக்காகவும் பள்ளிகளின் நலனுக்காகவும் தூக்கிலிடப்படுவார் என்று நம்புகிறேன், இது உடனடியாக பேசப்பட வேண்டிய ஒரு குற்றம் என்பதை அறிந்து கொள்ளுங்கள், குறைந்தபட்சம் இப்போது மாணவர்கள் / பெற்றோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை ஒரு இனவாத பிரச்சினையாக மாற்றக்கூடாது” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சம்மந்தப்பட்ட அந்த பள்ளி ஆசிரியர் வழக்கு குறித்து பேசிய தமிழக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், “போக்சோ சட்டம் என்பது தனிநபர் சம்மந்தமானது மட்டுமல்ல. அது சமூகம் தொடர்பானது. எனவே போக்சோ வழக்குகளை நாங்கள் தீவிரமாக பார்க்கிறோம். எனவே அந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: யூடியூபர் "சாப்பாட்டு ராமன்" அதிரடி கைது! அதன் பிறகு நடந்தது என்ன தெரியுமா?