இந்திய சினிமாவை பொறுத்தவரையில் புதிதாக ரிலீசாகும் திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடும் ‘பைரசி’ பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
திரைப்படம் ரிலீசான முதல் நாளே, சில சமயங்களில் அதற்கு முன்பாகவே இணையதளங்களில் வெளியாவது பட தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு சாபக்கேடாக இருந்து வரும் பைரசியை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதனை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் இந்த பைரசியை ஒழிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், திரையரங்குகளில் திருட்டுத்தனமாக திரைப்படங்களை காம்பேக்ட் கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்வதை தடுக்கும் முயற்சி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
கையும் களவுமாக பிடித்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும் என்ற நிலையில் சீனாவின் பிரபலமான திரைப்பட நிறுவனம் ஒன்று ‘பைரசி பிளாக்கர்’ என்ற புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி, Infrared எல்.ஈ.டி-க்கள் பொருந்திய திரை ஒன்றை சினிமா திரைக்கு முன் பொருத்த வேண்டும். இது திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களின் கண்களுக்கு தெரியாது. ஆனால், சட்டத்தை மீறி திருட்டுத்தனமாக படம் பிடிக்க முயலுபவர்களுக்கு ‘Piracy Blocker' என்ற வாட்டர் மார்க் தெரியும். படம் கேமராவில் பதிவாகாது.
இந்த தொழில்நுட்பம் பைரசியை ஒழிக்க மட்டுமின்றி திரைத்துறையில் வேலைவாய்ப்புக்கும் வழி வகுப்பதாக சீன திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர். இது பெரும்பாலும் சீனாவில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.