கோவாவின் பானாஜி நகரில் கோலாகலமாக நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் கிடைத்த கௌரவத்தை அடுத்து, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் இந்திய சினிமாவை கொண்டாடும் விதமாக மத்திய அரசு சார்பில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் சிறந்த படைப்புகளும், கலைஞர்களும் கவுரவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 50வது சர்வதேச திரைப்பட விழாவினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இன்று முதல் இந்த விழா 28ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் திரையிடப்படும் 26 படங்களில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது.
இது தவிர, ‘சோலே’ இயக்குநர் ரமேஷ் சிப்பி, ஒளிப்பதிவாள பி.சி.ஸ்ரீராம், தயாரிப்பாளர் என்.சந்திரா ஆகியோருக்கும் ‘லெஜெண்ட்ஸ் ஆஃப் இந்தியன் சினிமா’ என்ற கௌரவம் வழங்கப்பட்டது. இதனை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இணைந்து வழங்கினர்.
இதையடுத்து, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த கௌரவம் அளித்த IFFI-க்கு நன்றி. கடந்த காலம் எனக்கு ஒரு பகுதி. இன்னும் பல கனவுகளை எட்டிப்பிடிக்க வேண்டும்..” என பதிவிட்டுள்ளார்.