சில தினங்களுக்கு முன்னர் பொங்கல் 2022 அன்று ராதே ஷ்யாம், RRR, வலிமை, பீம்லா நாயக் போன்ற பெரிய படங்கள் வெளியாவதால் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா படத்தின் வெளியீடு ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பவன் கல்யானின் பீம்லா நாயக் படமும் தற்போது பொங்கல் மஹாசங்கராந்தி ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது. மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என உருவாகி உள்ளது. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யான் நடிக்கிறார், பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா டகுபட்டி நடிக்கிறார்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர் த்ரி விக்ரம் வசனம் எழுதுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். நாகவம்சி தனது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் தயாரிக்கிறார். ரவி கே சந்திரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் (பொங்கல்) மஹாசங்கராந்திக்கு ஜனவரி 12 அன்று வெளியாகிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாததால் படத்தின் வெளியீடு பிப்ரவரிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன் படி 2022 பிப்ரவரி 25 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீம்லா நாயக் ஒத்திவைப்பால் RRR, ராதேஷ்யாம் போன்ற படங்களுக்கு ஆந்திரா - தெலுங்கானாவில் இன்னும் கூடுதல் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வலிமை படத்திற்கும் இதன்மூலம் வெளிநாடுகளில் கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் RRR படம் ஜனவரி 7 ஆம் தேதியும், ராதேஷ்யாம் படம் ஜனவரி 14 ஆம் தேதியும் வெளியாக உள்ளது. வலிமை படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.