இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இரவின் நிழல்…
தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்த வித்தியாச முயற்சியாக ஒரே ஷாட்டில் உருவாகும் படமாக ’இரவின் நிழல்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் இந்த படத்தைக் காண ஆவலாக உள்ளனர். ஒரே ஷாட் படங்களிலேயே வித்தியாசமான படமாக இது ஒரு நான் லீனியர் படமாக அமைந்துள்ளது. உலகின் முதல் single shot நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 24 ஆம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் கலைப்புலி எஸ் தாணு படத்தை வெளியிடுகிறார்.
ரஹ்மான்…
இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக, ஏ.ஆர்.ரகுமானும், பார்த்திபனும் கடந்த 2001 ஆம் ஆண்டு யெலோலோ என்ற படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால் அந்தப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ‘இரவின் நிழல்’ படம் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் இணைந்தனர். இரவின் நிழல் படத்திற்காக 6 பாடல்களை ரஹ்மான் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவின் நிழல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் பார்த்திபன், A R ரஹ்மான், கலைப்புலி தாணு, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பார்த்திபனின் பேச்சு…
விழாவில் வழக்கம் போல தன் பாணியில் பேசிய பார்த்திபன் அனைவரையும் கவர்ந்தார். அதில் “ எனக்கு சினிமா எடுக்குறதுக்கு காசு இல்ல. ஆனால் வித்தியாசமா ஏதாவது செய்யணும்னுதான் சிங்கிள் ஷாட் படம் எடுத்தேன். அதுக்கு எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் தேவைப்பட்டது. அந்த சப்போர்ட்தான் A R ரஹ்மான். கடவுளக் கூட அபிஷேகம் பண்ணி ஏமாத்திடலாம். ஆனா நம்ம ரஹ்மான ஏமாத்த முடியாது.” என பேசி விழாவை கலகலப்பாக்கினார். பார்த்திபனின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.