துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, தேசிங்குராஜா, மனம் கொத்தி பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் எழில்.
இவரது திரைப்படங்களில் இருக்கும் நகைச்சுவை அனைவராலும் ரசிக்கக் கூடியது. எனினும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்குவதிலும் வல்லவரான இயக்குநர் எழில், தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் இருந்து சற்றே புதுமையாக, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் ஒரு த்ரில்லர் படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இதுபற்றி இயக்குநர் எழில் கூறுகையில், “யுத்த சத்தம் என் இதயத்திற்கு நெருக்கமானது. முதல் மற்றும் முக்கிய காரணம், இது எனது முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மற்றும் தனித்துவமானது. இதுவரை, நான் நகைச்சுவை சார்ந்த படங்களை மட்டுமே இயக்கினேன்.
ஆனால் இது ஒரு சீட்-ஆஃப்-சீட் கொலை மர்மம் பற்றிய படம். ராஜேஷ் குமார் சார் எழுதிய நாவலின் அடிப்படையிலான இந்த படத்துக்கு அதே பெயரையே தலைப்பாய் வைத்துள்ளோம். அவர் எழுதிய இந்த கதைத் தொகுப்பை இயக்குவதற்காக அவர் என்னைப் பாராட்டினார்.
நான் பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன், இப்போது அவரை இயக்குவது மிகவும் ஸ்பெஷலானது. இப்போது கூட, அவர் எனக்கு சில அசாதாரணமான கதை சொல்லும் நுட்பங்களை அளித்து வருகிறார். கவுதம் கார்த்திக் திறமை வாய்ந்தவர். இந்த சீட் எட்ஜ் த்ரில்லர் படத்தின் இந்த விளிம்பை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள்.” என கூறியுள்ளார்.
தவிர இந்த படத்தில் ‘பிச்சைக்காரன்’, ‘வெள்ளை யானை’ படங்களில் நடித்த மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஸ்வின் மற்றும் இன்னும் சில முக்கிய கலைஞர்கள் நடிக்கின்றனர்.
டி இமான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக டி.விஜயகுமாரன் மற்றும் எழில் ஆகியோரால் ‘யுத்த சத்தம்’ படம் தயாரிக்கப்படுகிறது.
ராஜேஷ் குமார் நாவலான யுத்த சத்தம் என்கிற நாவலை மையப் படுத்திய இந்த படத்தை அதே தலைப்புடன் இயக்குநர் எழில் இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நடிகை சாய் பிரியா நடிக்கிறார்.
“எண்டே உம்மண்ட பேரு(2018)” மலையாள படத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து நடித்ததன் மூலம் புகழ்பெற்ற சாய் பிரியா தமிழில் கதாநாயகியாக யுத்த சத்தம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். முன்னதாக, அவர் 2017 கோலிவுட் திரில்லர் படமான 'சிவலிங்கா'வில் நடித்தார்.
இயக்குநர் எழில் சமீபத்திய படங்களான “வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்” உள்ளிட்ட திரைப்படங்களில் இருந்த காமெடி ஜனரஞ்சகமாக மக்களை கவர்ந்தது. குறிப்பாக அந்த படத்தில் ரோபோ ஷங்கர் பேசும் “அன்னைக்கு காலையில 6 மணிக்கு” வசனம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்நிலையில் மீண்டும் எழில் படத்தில் ரோபோ ஷங்கர் இடம் பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.