நடிகரும், தேசிய விருதுபெற்ற படமான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தின் இயக்குநருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், அண்மையில் தன் பிறந்த நாளை (நவம்பர் 15-ஆம் தேதி) கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தில் ஜெய்பீம் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் நிஜவாழ்க்கை மனிதரான நீதியரசர் சந்துருவை கவுரவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பழங்குடி இருளர் இன மக்களின் மீதான காவல்துறையினரின் மனித உரிமை அத்துமீறல் குறித்து பேசும் இப்படத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தரும் வழக்கறிஞராக சூர்யா நடித்திருந்தார். சூர்யாவின் கதாபாத்திரம், பிரபல நீதியரசர் சந்துருவின் நிஜவாழ்க்கையை தழுவி வடிவமைக்கப்பட்டது.
இந்நிலையில் நீதியரசர் சந்துருவுடன், தனது பிறந்த நாளை நடிகர் & இயக்குநர் பார்த்திபன் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், “இவ்வருடம் என் குழந்தைகள் என் பிறந்த நாளை கொண்டாட விரும்பினார்கள்.
அந்த கொண்டாட்டம் என்பது எல்லோரும் கூடி மகிழ்ந்து உண்டு, சிரித்து, மகிழ்வாக கழிக்கும் தருணம். அப்படி அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் போது எனக்கு என்ன தோன்றியதென்றால்.. அதை மறுக்கவுமில்லாமல் அதில் வேறொரு பயனுள்ள காரியத்தை செய்யலாம் எனத் தோன்றியது.
பிறந்த நாளை பயனுள்ள நாளாக மாற்றலாம் என என்னுடைய நீண்டநாளைய நண்பர் நீதியரசர் சந்துரு அவர்கள், ஜெய்பீம் படம் மூலமாக இந்த உலகம் அறிய, இந்த உலகம் புகழ காரணமாயிருக்கிறார்.
இந்த புகழ் தேடி அவர் வாழ்க்கை இல்லை. இப்படியெல்லாம் தன்னை பற்றி ஒரு நாள் படமெடுப்பார்கள், மதிப்பு வரும், மரியாதை கூடும் என்றெல்லாம் அவர் கருதியதில்லை. அப்படி கருதியிருந்தால் இதை செய்திருக்கவே முடியாது. பிரதிபலன் பாராமல் தான் அவர் இந்த காரியங்களெல்லாம் செய்திருக்கிறார். அவரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும் எனது எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் தலைமை கண்டிருக்கிறார்.
ஆனால் இன்று அவரை பாராட்டுவது, கௌரவப்படுத்துவது என்னை நானே பாராட்டிக்கொள்வதை போல ஒரு சுயநல விசயாமாக எனக்கு தோன்றியது. எனவே அவரை அழைத்து கௌரவப்படுத்தலாம் என்று கருதி என்னை நானே கௌரவப்படுத்தி கொண்டேன். நண்பர் ஓவியர் ஶ்ரீதர் வரைந்த ஓவியம் ஒன்றை சந்துரு அவர்களையும் அவரின் துணைவியாரையும் வரச்சொல்லி, அவர்களிடம் கொடுத்தேன்.
ஒரு இன்ஸ்பிரேஷனாக, இளைஞர்களுக்கு ஒரு யோக்கியனா வாழ்ந்தா, இப்படிபட்ட பெருமையெல்லாம் கிடைக்கும், இந்த வாழ்கையில பணத்த மீறி, புகழ மீறி உள்ளுக்குள் ஒரு நல்ல மனிதனாக, நாம் எடுத்து கொண்ட தொழிலை, சீராக சிறப்பாக செய்வதற்கு வெளியிலிருந்து யாரும் பாராட்ட தேவையில்லை, அகம் மகிழ்ந்து போகுமதில், அப்படிபட்ட அகமகிழ்ச்சியை, அதன் விளைவை அதன் மதிப்பை, இன்றைய இளைஞர்களும் தெரிந்து கொள்ள ஒரு முன்னுதாரணமாக திரு.சந்துரு அவர்கள் திகழ்கிறார்.
அதே போல் நானும் இந்த பிறந்த நாள் ஏதாவது ஒரு வகையில், யாருக்கேனும் உதவும் வகையில் அமையவேண்டுமென்று ஆசைப்பட்டு, இப்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தி மகிழ்ச்சியை தேடிக்கொண்டேன். அதை உங்களோடு நான் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.