தமிழ் சினிமா ரசிகர்களின் இதயத்தில் நீங்காத இடம்பிடித்தவர் பரவை முனியம்மா பாட்டி. பாட்டி என்றாலே ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக நினைவு வருவது இவர் முகம் தான். மதுரை மாவட்டம், பரவை என்ற ஊரை சேர்ந்த இவர் தன் நாட்டுப்புற பாடல் திறமையால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார். சிங்கப்பூர், லண்டன் உட்பட 100க்கும் மேற்பட்ட இடங்களில் இவர் மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
விக்ரம் நடித்த ’தூள்’ படம் மூலம் திரையுலகிற்கு எண்ட்ரி கொடுத்த அவர் பாடிய ‘சிங்கம் போல நடந்து வறான் செல்ல பேராண்டி’ பாடன் பெரிய ஹிட் அடித்தது. 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பரவை முனியம்மா விவேக்குடன் நடித்த காமெடி காட்சிகள் பெரிதும் பேசப்பட்டன. பல தொலைக்காட்சி சமைய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் உடல்நலக்குறைவு காரணமாக தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பரவை முனியம்மா ’மாய நதி’ திரைப்படத்தை பார்க்க வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது மாயநதி படத்தின் நாயகன் அபி சரவணன் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார்.
இதனால் அபி சரவணன் நடித்த படத்தை பார்க்க விரும்பிய பரவை முனியம்மா தன் உடல்நலிவை பொருட்படுத்தாது, வீல் சேரில் தன் குடும்பத்துடன் மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் இந்த படத்தை பார்த்துள்ளார். நெடுநாட்களுக்குப் பிறகு திரையரங்கு சென்று படம் பார்ப்பது மனதுக்கு நிம்மதி அளிப்பதாக பரவை முனியம்மா தெரிவித்துள்ளார்.