விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இருந்து வருகிறது.
பாண்டியன் மளிகை ஸ்டோர்ஸ் வைத்திருந்து பின்னர் முன்னேறும் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்கள் கொண்ட கூட்டு குடும்பத்தின் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடரை மக்களும் ஆவலுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகும் சூழ்நிலையில், விரைவில் 1150 எபிசோடுகளையும் அடைய உள்ளது. தற்போதைய கதைப்படி, மீனாவின் தங்கை திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தால், ஜீவா தன் சகோதரர்களை விட்டு பிரிந்து தன் மனைவியுடன் மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இதேபோல், இந்த மொத்த குழப்பத்துக்கு காரணமான கண்ணனும், ஐஸ்வர்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு, குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே சென்றுவிட்டனர்.
இதனிடையே, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவ்வப்போது ஏராளமான நடிகர், நடிகைகளும் மாறி வருகிறார்கள். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்ட சூழலில், கடைசி சகோதரராக வரும் கண்ணனின் மனைவியாக நடித்துவந்த நடிகை சாய் காயத்ரி, இந்த சீரியலில் இருந்து அண்மையில் விலகினார். இதனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே விஜே தீபிகா நடிக்கிறார்.
இந்நிலையில், தான் விலகியது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பேசிய நடிகை சாய் காயத்ரி, “முதல் விஷயம், இது எனக்கு சொல்லி எடுக்கப்பட்ட கதை கிடையாது. சீரியல் என்பது கதையை பொருத்த விஷயம் அல்ல. அது வாரம் வாரம் ஓட வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுகிற கன்டென்ட். சீரியலை பொருத்தவரை ஒன்லைன் தான் சொல்லுவார்கள். அந்த கதையை முழுமையாக சொல்ல மாட்டார்கள். கதையைப் பற்றி நாம் கேட்க முடியாது. கேட்க கூடாது.
பல ஆர்டிஸ்டுகள் தங்கள் கதாபாத்திரம் மாறும்பொழுது, பரவாயில்லை என தங்கள் கதாபாத்திரம் மாறினாலும் பண்ண தயார் என்று சொல்லுவார்கள். சில ஆர்ட்டிஸ்ட்களுக்கு தங்களுடைய கதாபாத்திரம் மாறும்பொழுது அதை பண்ணுவதற்கு யோசிப்பார்கள். அது தங்களுடைய எதிர்காலத்துக்கு சரியாக இருக்காது என்று கருதி, அந்த கதாபாத்திரத்தை கருதி அதிலிருந்து விலக முடிவு எடுப்பார்கள். ஏனென்றால் நமக்கு என்ன பிடித்து இருக்கிறதோ அதைத்தான் நாம் செய்ய முடியும். நாம் நம் தர்மத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்தேன்.” என குறிப்பிட்டுள்ளார்.