பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தின் ஆடியோ உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். “மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார்.
'சார்பட்டா பரம்பரை' படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் “நட்சத்திரம் நகர்கிறது” படத்தை இயக்கினார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
"நட்சத்திரம் நகர்கிறது" படத்தைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தை பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவை கிஷோர் குமாரும், படத்தொகுப்பை செல்வாவும் கவனித்துக்கொள்கின்றனர். எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரியும் இந்தப் படத்தில் ஏகன் ஏகாம்பரம் ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் 18 ஆம் நூற்றாண்டு பின்னணியில் கோலார் தங்க வயலை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல டைம்ஸ் மியூசிக் நிறுவனம் (Junglee Music) கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் முதல் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.