ஐந்து மாதங்களுக்கு முன் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆனது.
அத்துடன் உலகளவில் பல மொழிகளில் இந்த பாடல் ஹிட் அடித்து வருகிறது. பாடகி தீ மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு பாடிய இந்த ராப் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஏ.ஆர்.ரஹ்மானின் மாஜா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு ‘தெருக்குரல்’ அறிவு எழுதிய இந்த வலுவான பாடல் அனைவரின் மனதிலும் நிலைத்திருந்தது.
இந்நிலையில் தான் பிரபல சர்வதேச பத்திரிகையின் 'ரோலிங் ஸ்டோன்ஸ்' இன் இந்திய பதிப்பின் அட்டைப்படத்தில், 'என்ஜாய் எஞ்சாமி' மற்றும் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'நீயே ஒளி' ஆகிய பாடல் வரிகளை எழுதிய ‘தெருக்குரல்’ அறிவு-னுடைய புகைப்படம் இடம் பெறாததற்காக பா.ரஞ்சித் கடுமையாக சாடியுள்ளார்.
அதன்படி 'ரோலிங் ஸ்டோன்ஸ்'-இன் ஆகஸ்டு மாத இந்திய இதழில் பாடகி தீ மற்றும் ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோர் 'என்ஜாய் எஞ்சாமி' மற்றும் 'நீயே ஒளி' ஆகிய தனிப்பாடல்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இரண்டு பாடல்களின் பாடல்களையும் எழுதிய ராப்பர் ‘தெருக்குரல்’ அறிவு, ரசிகர்களின் கவனத்துக்கு எடுத்து வரப்படவில்லை என்பதுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில் ரஞ்சித்தின் ட்வீட் வைரலாகி வருகிறது. இயக்குநர் சி.எஸ். அமுதன் மற்றும் பல நெட்டிசன்கள் தங்கள் சமூக ஊடகங்களில் மாஜா புரொடக்ஷன்ஸ் தயாரித்த பாடல் என்பதால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இப்பாடலின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரிடம் இந்த பிரச்சினை குறித்து பேசும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் இது முதல் நிகழ்வு அல்ல என்றும், டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் இடம்பெற்ற போஸ்டர்களிலும் அறிவு இடம் பெறவில்லை என்றும் ரசிகர்கள் ஆதாரம் காட்டி வர, ரஞ்சித் தமது ட்வீட்டில், “நீயே ஒளி மற்றும் என்ஜாய் எஞ்சாமியின் பாடலாசிரியரும் பாடகருமான ‘தெருக்குரல்’அறிவு மீண்டும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார். ரோலிங் ஸ்டோன் இந்தியா மற்றும் மாஜா(வை நோக்கி), இந்த இரண்டு பாடல்களின் வரிகளுமே, பொதுவெளி அங்கீகாரம் அழிக்கப்படுவதற்கு எதிரான சவால்தான் என்பதை புரிந்துகொள்வது அவ்வளவு கஷ்டமா?” என குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.