இயக்குநர் சேரன் இயக்கியிருந்த ஆட்டோகிராஃப் படத்தில் தேசிய விருது பெற்ற மிக முக்கியமான பாடல் ஒவ்வொரு பூக்களுமே பாடல்.
இந்த பாடலின் மூலம் புகழ்பெற்ற கோமகன் கொரோனாவால் உயிரிழந்திருக்கிறார். கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி நடித்திருந்த ஆட்டோகிராஃப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடலை பரத்வாஜ் இசையமைக்க பா.விஜய் எழுதியிருந்தார். இந்த பாடலை பாடிய பாடகி சித்ராவுக்கு தேசிய விருதுகள் கிடைத்த நிலையில் இந்த பாடலில் சினேகாவுடன் இணைந்து நடித்ததோடு உணர்வுபூர்வமாக ஓரிரு வார்த்தைகளை பாடி நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கோமகன்.
கடந்த 2019ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொண்டு ஆர்க்கெஸ்ட்ரா வைத்திருந்த கோமகன் இந்த கொரோனா காலத்தில் மேடை நிகழ்ச்சிகள் அவ்வளவாக இல்லாமல் இருந்த நிலையில் 50 சதவீத கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பாக தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடைய உடல் நிலையை இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் கேட்டறிந்து வந்தார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள ஐசிஎப் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோமகன் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அதிகாலை 1:30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார் கோமகன்.
இந்நிலையில் இவருடைய மறைவு குறித்து பேசிய இயக்குனர் சேரன், "வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.." என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.