சினிமா என்பது மக்கள் வாழ்வியலுடன் கலந்துவிட்ட ஒன்றாகும். ஆனால் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை என்னவாகும் என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. டெனட் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வெளியிட்ட கிரிஸ்டோபர் நோலன் மக்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். தியேட்டரில் பிரம்மாண்டமாக ஒரு படத்தை பார்க்கும் அனுபவத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சின்ன பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட பல நிறுவனங்கள் திட்டமிட்டு அதை செயல்படுத்தவும் தொடங்கிவிட்டது. பெரிய படங்கள், மாஸ் ஹீரோ நடித்த படங்கள் இவைதான் தியேட்டரில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் நிலவி வருகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் தியேட்டர்களை கண்டு மக்கள் ஒதுங்கிவிடாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் க்யூ ஆர் கோட் பயன்பாடுகளும், ஹாண்ட் மெட்டல் டிகக்டர் மூலம் பலருக்கு சோதனை செய்ய முடியாத காரணத்தால் ஏர்போர்ட்டில் காணப்படும் டோர் ப்ரேம் மெட்டல் டிடெக்டர்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மக்கள் ஒவ்வொருவரும் போதிய சமூக இடைவெளியுடன் உட்காரும்படி இருக்கை வசதிகள் மாறும். மாஸ்க் மற்றும் சானிடைஸர் ரசிகர்கள் கட்டாயமாக கைவசம் வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்தால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கண்ணாடி வழங்கப்படும், அது அவர்கள் சொந்தமாக வாங்க வேண்டியிருக்கும். மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாது.
இந்தியாவிலும் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும். முக்கியமாக மும்பை உள்ளிட்ட பெரும் நகரங்களில் சினிமா தியேட்டர்களை பல புதுவித வசதிகளுடன் உருவாக்க பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன. தியேட்டர்கள் ஜூலை 15 அல்லது ஜூலை இறுதிக்குள் திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்குள் எத்தனை படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று தெரியாது.
மக்கள் ஆவலுடன் திரையரங்குகளில் இனி படம் பார்ப்பார்களா அல்லது அச்சத்தில் வீட்டிலேயே முடங்கி இப்போது லாக்டவுன் காலக்கட்டத்தில் பார்ப்பதுபோல் பழக்கமான ஓடிடி தளங்களில் தொடர்வார்களா என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஆனால் இணைய வசதிகள் ஏதுமில்லாத சாதாரண ரசிகர்களைப் பொறுத்தவரையில் சிறிய படமாக இருந்தாலும் சரி பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி தியேட்டரில் பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். நெட் அல்லது ஃபோனில் படம் பார்ப்பது என்பது பிரியாணியில் குஸ்காவை மட்டும் சாப்பிடுவது போன்றது என்று ஒரு ரசிகர் அண்மையில் சோஷியல் மீடியாவில் கூறினார்.
எந்தக் காலத்திலும் மக்களை ஆறுதல்படுத்துவதும், சந்தோஷப்படுத்துவதும் சினிமாதான். கொரோனா பிரச்சனைகள் முடிந்து புத்துணர்வுடன் மீண்டும் சினிமா உங்கள் முன் வரும். அந்த நாளுக்காக காத்திருப்போம்.