ஒத்த செருப்பு படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் 'இரவின் நிழல்'.
நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தினை பார்த்திபன் இயக்கி, அதில் அவரே நடித்தும் உள்ளார். ‘இரவின் நிழல்’ படம் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானும், பார்த்திபனும் இணைந்துள்ளனர். ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்ற இரவின் நிழல் திரைப்படம் வரும் வாரத்தில் ரிலீஸ் ஆகிறது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20-ஆம் தேதி பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சிறந்த படம் மற்றும் சிறந்த ஒலிப்பதிவிற்கான தேசிய விருதை வென்ற இந்த படத்தின் பின்னணி இசையை சி. சத்யாவும், ஒரு பாடலை சந்தோஷ் நாராயணனும் இசையமைத்தனர். ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், சுதர்ஷன் எடிட்டராகவும் பணிபுரிந்தனர். இந்தப் படத்தை நடிகர் பார்த்திபன் தமது சொந்த தயாரிப்பு நிறுவனமான பயோஸ்கோப் பிலிம் பிரேமர்ஸின் கீழ் தயாரித்தார்.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தை தயாரிக்க, பார்த்திபன் இயக்க அபிஷேக் பச்சன் நாயகனாக நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிலையில் இரவின் நிழல் பட புரொமோஷனுக்காக விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் திடீரென நடிகர் பார்த்திபன் எண்ட்ரி கொடுத்தார். அவருடன் நடிகையும் அவரது உதவியாளருமான பிரிக்டாவும் வருகை தந்தார்.
இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தை ஹாலிவுட்டிலும் எடுக்கப் போவதாக நடிகர் மற்றும் இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு ஈடாக முன்னெடுத்துச் செல்லும் யோசனைகளுடன் திகழ்வதாக பார்த்திபனை கொண்டாடும் ரசிகர்கள், இந்த தகவலை அறிந்தது முதலே இன்னும் ஆர்வமாக உள்ளனர்.
இதனிடையே பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.