இந்தியாவின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்காக குஜராத்தி படமான 'செலோ சோ' (Chhello Show) என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தகவலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவனுக்கு சினிமா மீதுள்ள காதலைச் சுற்றி நகரும் திரைப்படம் தான் இது என படத்தின் ட்ரெயிலர் மூலம் தெரிய வருகிறது. வரும் அக்டோபர் 14 ஆம் தேதியன்று இந்த திரைப்படம் குஜராத் மாநிலத்தில் உள்ள திரை அரங்குகளில் வெளியாகவும் உள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலையில், Chhello Show படத்தில் நடித்த சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம், ஒட்டுமொத்த படக் குழுவினரையும் கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த படத்தில் ராகுல் கோலி என்ற சிறுவனும் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த 4 மாதங்களாக ரத்தப் புற்றுநோயால் சிறுவன் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, அவரது உடல்நிலை சற்று மோசம் அடையவே உடனடியாக அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கே சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் ராகுல் கோலி உயிரிழந்துள்ளார்.
இது பற்றி பேசும் ராகுல் கோலியின் தந்தை, "கடந்த சில தினங்களுக்கு முன், தனது காலை உணவை ராகுல் சாப்பிட்டான். அடுத்த சில மணி நேரங்களில் வாந்தி எடுக்கவும் அவர் தொடங்கி விட்டார். என் குழந்தை இன்று இல்லை. எங்கள் குடும்பமே சோகத்தில் மூழ்கி உள்ளது. மகனின் இறுதி சடங்கிற்கு பிறகு, அவர் நடித்த படத்தை நாங்கள் ஒன்றாக பார்ப்போம்" என துயரத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் நடித்த படத்தை குடும்பத்துடன் காணவும் ராகுல் கோலி ஆசைப்பட்டிருந்ததாக அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் நடித்த சிறுவன், திரைப்படம் வெளியாக 3 நாள் இருக்கும் வேளையில் உயிரிழந்த சம்பவம், சினிமா ரசிகர்கள் பலரையும் கடும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது.