ஆந்திரா 2021, 30.டிச:- ஆந்திராவில் அரசு சார்பில் மட்டுமே சினிமா டிக்கெட்டுகள் என்கிற பரபரப்பு திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டம் அமலுக்கு வருகிறது.
அரசு இணைய தளத்தில் டிக்கெட்டு விற்பனை
முன்னதாக, ஆந்திர அரசு இதற்கான பேரவை ஒப்புதலை பெற்ற தகவல்கள் வெளியாகின. இந்த சடப்படி இனி அரசு சார்புடைய சமூக வலை தளங்களில் குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும், ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்படும்.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய முடியாது!
அதாவது, திரைப்படம் பார்க்கும் மக்கள் டிக்கெட்டுகளை, அரசின் குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் இதனால், திரையரங்குகளுக்கு முன்பாக போக்குவரத்து பாதிப்பு குறையும் என்றும் அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இதன்மூலம் அதிக காட்சிகளை ஓட்டி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்று ஆந்திர திரைத்துறை தொடர்பான அமைச்சர் நானி முன்னதாக தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துமா?
இதனிடையே ஆந்திரா மற்றும் தெலுங்கானா என 2 மாநிலங்களிலும் திரைப்படங்கள் வெளியாவதால், ஆந்திராவில் மட்டும் அமலுக்கு வரும் இந்த புதிய சட்ட திருத்தம், தயாரிப்பாளர்களுக்கு இந்த நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறி வந்தனர்.
பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அரசின் திரைப்பட ஒழுங்குமுறை தொடர்பான இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி இருப்பதை போன்று, திரைப்பட டிக்கெட்டுகளின் விலையும் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருத்தலின் அவசியம் குறித்தும் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
பார்வையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது!
இந்நிலையில் தற்போது அமலுக்கு வந்துள்ள இந்த சட்டப்படி, ஆந்திர அரசால் விநியோகிக்கப்படும் டிக்கெட்டுகளை பெறும்போது, பார்வையாளர்கள் எவ்வித ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகளை செலுத்துவதற்கான அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ஆந்திர அரசின் கீழான ஆந்திர திரைப்பட மற்றும் திரையரங்க மேம்பாட்டு கூட்டமைப்பு ஆன்லைன் மூலமாக ஆந்திராவில் வெளியாகும் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பணியை மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
முதல் ரிலீஸே ஆர்.ஆர்.ஆர் படமா?
மிக முக்கியமாக, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய மற்றும் தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் (தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம்) இந்த சட்டத்திட்டத்தின் கீழ் ரிலீஸ் ஆகும் முதல் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
“பாகுபலி” இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் 2022, ஜனவரி 7-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து பிரஷாந்த் நீல் இயக்கத்தில் - யஷ் நடிப்பில் மெகா ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படத்தின் 2-ஆம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.