உலகப்பிரபல விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டிகள், இந்த வருடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன.
ஜூலை 23 தொடங்கிய இந்த போட்டிகள், கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் எண்ணற்ற வீரர்கள் சென்றுள்ளனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் ஒரு பாடலை தயாரித்துள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். விளையாட்டு வீரர்களின் விபரங்களுடன் உருவாகியுள்ள இந்த பாடல் வீடியோவில், யுவன் பாடுவதும் பதிவாகியுள்ளது.
இந்த பாடலை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ஏனைய கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் வைத்து, தமிழக முதல்வர் வெளியிட்டார்.
இதுபற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "#Olympics-இல் வெற்றிபெற்று தாய்நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க களம்காணும் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள #VendruvaVeerargale பாடலை வெளியிட்டேன்." என தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.