நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருவதுடன், சட்டமன்ற தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிக்பாஸ் போட்டியின் ஃபைனலுக்கு பிறகு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது மகள்கள் ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் தரப்பில் இருந்து புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் கூறியதாவது, ''இன்று காலையில் ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் திரு.ஜே.எஸ்.என் மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் திரு.மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார்.
அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்து கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டு மக்களை சந்திப்பார். மகிழ்விப்பார்.
அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையிலும், அவர் அறுவை சிகிச்சை முடிந்து, அவர் குணமடைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.