உலகம் முழுவதும் ஏகோபித்த ரசிகர்களால் கொண்டாடப்படும் முக்கியமான தொடர்வரிசை படம் ஜேம்ஸ் பாண்ட். அந்தவகையில் ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் காத்திருந்த ஒரு முக்கியமான திரைப்படம் திரைக்கு வருகிறது.
ஆம்,‘நோ டைம் டூ டை’ என்கிற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகிறது. சினிமா வரலாற்றில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து அதிக முறை எடுக்கப்பட்ட திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஜேம்ஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் தொடர் வரிசையில் தற்போது உருவாகியுள்ள ‘நோ டைம் டூ டை’ என்கிற இந்த திரைப்படம் இந்த வரிசையில் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளி என்கிற இந்த கற்பனை கதாபாத்திரம், உலகம் முழுவதும் அதிக சினிமா ரசிகர்களால் விரும்பப்படும் முக்கியமான கதாபாத்திரம். ஷான் கானரி, திமோத்தி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ் பாண்ட் தொடர் வரிசை படங்களில் நடித்துள்ளனர். இப்போது ஜேம்ஸ் பாண்டாக ‘நோ டைம் டூ டை’ படத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார்.
‘நோ டைம் டூ டை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இத்திரைப்படத்தில் சண்டை காட்சி சிறப்பாக இருக்கிறது என்பது இந்தத் ட்ரெய்லரை பார்த்தாலே தெரிய வருகிறது. இதனால் ரசிகர்களால் இத்திரைப்படத்தை காண்பதற்காக காத்திருக்க முடியவில்லை. இந்த மாதம் செப்டம்பர் 28ஆம் தேதி, சுவிட்சர்லாந்தில் நடைபெறும் திரைவிழாவில் இந்த படத்தை வெளியிடவிருக்கின்றனர்.
அதற்கு அடுத்த நாள் செப் 29ஆம் தேதி சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, டென்மார்க், பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. பல்கேரியா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் அக்டோபர் 1-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது.
இந்தியாவை பொருத்தவரை அக்டோபர் 8-ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்றும், யு.எஸ்ஸிலும் அதே நாளில்தான் திரைப்படம் வெளியாகும் என்றும் தெரியவந்திருக்கிறது.
உலக அளவில் மிகப்பெரிய ஹாலிவுட் திரைப்படங்கள் கொரோனாவால் திரைக்கு வராத நிலையில், ஜேம்ஸ் பாண்ட் படத்தின் இந்த திரையரங்க வெளியீடு என்பது அதிரடி ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் கடைசியாக, தான் நடிக்கும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருந்து, டேனியல் கிரெய்க், இப்படக்குழுவினருடன் மிகவும் உருக்கமாக பேசி விடைபெறும் வீடியோ வெளியாகி, பலரையும் கண்கலங்க வைத்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் படம், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடித்த முதல் படமாக அமைந்தது. இதுவரை நான்கு ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கின்றன. ஐந்தாவதாக ‘நோ டைம் டூ டை’ திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடித்து முடித்திருக்கிறார்.
அதே சமயம் இந்த திரைப்படம், தனது ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் கடைசி திரைப்படமாக இருக்கும் என்பதை குறிப்பிட்டு, மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார் டேனியல் கிரெய்க். இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களும் இவரை மிகவும் மிஸ் பண்ணப் போவதாக உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.