பிக்பாஸ் வீட்டுக்குள் தற்போது இசைவாணி கிச்சன் டீமுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதாவது இதற்குக் காரணம், கிச்சன் நெருப்பு ஆற்றலின் கண்ட்ரோலில் இருக்கிறது. இசைவாணி நெருப்பு ஆற்றலுக்கான காயினை தன்வசம் வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் மேலும் சில விதிகளை வகுத்துக் கொண்டும், இன்னும் கட்டுப்பாடுகளை விதித்திக் கொண்டும் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டுமென்று பிக்பாஸால் இசைவாணி அறிவுறுத்தப்பட்டு இருந்தார்.
அதன் பிறகு பிக்பாஸ் வீட்டுக்குள், தான் சொல்வதை அனைவரும் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஒருவேளை தான் கடிந்து கொள்வது போல் கூறினாலும் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஏற்கனவே அனைவரிடமும் இசைவாணி கோரிக்கை வைத்திருந்தார். பிரியங்கா உள்ளிட்ட பலரும் அதற்கு ஆமோதித்தனர். அதன்பிறகு கிச்சனில் சமைக்கக்கூடிய எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எல்லாவற்றிலும் இசைவாணி கொஞ்சம் கண்டிப்பும் கட்டுப்பாடும் காட்டியிருந்தார்.
இந்நிலையில் இசைவாணி, தான் கூறக்கூடிய விஷயங்களை ஆர்டர் பண்ணும் தொனியில் சற்றே சர்வாதிகாரப் போக்கில் கூறுவதாக இமான் அண்ணாச்சி கூறியிருந்தார். இதேபோல் இசைவாணி பாசமாக பேசுவதை மறந்து விட்டார் என்றும், பாடுவதை மறந்துவிட்டார் என்றும் தாமரை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இவற்றை தவிர்த்து இன்னொரு சிக்கலும் இருந்தது. தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் கேப்டனாக இருப்பது மதுமிதா. ஆனால் பெரும்பாலான முடிவுகள் கிச்சன் தொடர்பாக எடுக்கப்படுவதால், அவற்றில் மதுமிதாவின் ஆலோசனைகள் எதுவுமே கேட்டு முடிவெடுக்கும் சூழல் இசைவாணிக்கு இல்லை.
எனவே இசைவாணி தன்னிச்சையாக முடிவு செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் தன்னுடன் ஆலோசித்து முடிவுகளை எடுக்குமாறு மதுமிதா கேட்டுக்கொண்டார். ஒரு கட்டத்தில், “நான் என்ன செய்தேன்? நான் எதுவுமே செய்யவில்லை.. தூங்குபவர்களை தூங்காதீர்கள் என்று கூறினேன்.. அவ்வளவுதான்” என்று மதுமிதா அழவே தொடங்கிவிட்டார்.
அவரை ஹவுஸ் மேட்ஸ் சமாதானப்படுத்தினர். அதேசமயம் இதை ஒரு அளவுக்கு புரிந்துகொண்ட மதுமிதா, பிக்பாஸ் இசைவாணியிடம் கடுமையாக அறிவுறுத்தியதால் இசைவாணி அவ்வாறு நடந்து கொள்வதாகவும், அது தனக்குப் புரிகிறது என்று மதுமிதா குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் இசைவாணி கூறும்பொழுது, மதுமிதா சொல்லும்போது கேட்காத ஹவுஸ் மேட்ஸ் சிலர் இப்போது மதுமிதாவுக்கு ஆதரவாக பேசுவது போல் பேசி, தங்களுக்கு இடையில் சிக்கலை உருவாக்குபவதாகவும் தெரிவித்திருந்தார்.