Sarathkumar BiggBoss Entry: டிசம்பர் 4-ஆம் தேதி எபிசோடில் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகைதந்த நடிகர் சரத்குமார் ஒரு பெரும் பரபரப்பான அறிவிப்பை போட்டியாளர்களுக்கு முன்னிலையில் வைத்தார்.

யாராவது ஒருவர்தான் வெற்றி பெறமுடியும்!
அதன்படி 3 லட்ச ரூபாய் என்று எழுதப்பட்டு இருக்கும் பெட்டியை அவர்கள் கண்முன்னே திறந்து காட்டிய நடிகர் சரத்குமார், அந்தப் பெட்டிக்குள் 3 லட்சம் மட்டுமல்லாமல் அதற்கு மேலும் இருக்கலாம், ஆனால் தனக்கு தெரியவில்லை. எப்படியும் இந்த போட்டியில் யாராவது ஒருவர்தான் வெற்றி பெறமுடியும், யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.
இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு சென்று விடுங்கள் என்றும் நான் சொல்லவில்லை. அது உங்கள் முடிவு, இன்றைய பெனிஃபிட்டா? அல்லது நாளைய சாதனையா? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்திருந்தார்.
அதிகரித்துக் கொண்டே போகும் பணப்பெட்டி மதிப்பு
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அந்தப் பெட்டி பற்றியும், பெட்டியில் இருந்த பணம் பற்றியும் ஆங்காங்கே அமர்ந்து பேசத் தொடங்கிவிட்டனர். இதனை அடுத்து, அந்த பெட்டிக்குள் இருக்கும் பணம் 3 லட்சம் ரூபாயில் இருந்து அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. சுமார் 6 லட்சம் ரூபாயை கடந்து செல்லும் இந்த தொகை 25 லட்சம் ரூபாய் வரை செல்லலாம் என்று நிரூப் கூறுகிறார்.
நான் ஏண்டா எடுக்கப் போறேன்?
இதனிடையே அந்தப் பெட்டியை தாமரைச்செல்வி, அருகில் நின்று ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்க, அவரிடம், “எந்த காரணத்தைக் கொண்டும் அதை எடுத்து விடாதே!” என்கிறார் நிரூப். அதற்கு தாமரையோ, “நான் ஏண்டா எடுக்கப் போகிறேன்?” என்று கேட்கிறார்.
உனக்குதான் கடன் பிரச்சினை இருக்குல்ல?
பின்னர் தாமரையிடம் தனிமையில் அமர்ந்து பேசும் நிரூப், “உனக்குதான் ஏகப்பட்ட கடன் பிரச்சினை இருப்பதாக சொல்லிக் கொண்டு இருந்தாயே? நீ இந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கடன்களை அடைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா?” என்பதுபோல் கேட்கிறார். இதற்கு தாமரை என்ன பதில் சொல்வார் என்பது, இந்த பெட்டி வந்ததில் இருந்தே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
நாடக கலைஞர் தாமரைச்செல்வி
தாமரைச்செல்வி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க நாடக கலைஞராக திகழ்பவர். விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடல் பாடிய பிரபல பாடகர் மற்றும் நாடக கலைஞர் முத்துச்சிற்பி தாமரைச்செல்வியுடன் இணைந்து ஒரு நாடக கலையை நிகழ்த்தி பிக்பாஸில் அறிமுகப்படுத்தி வைத்தார்.
தாமரையின் கண்ணீர் கதை
அதன் பின்னர் தாமரை செல்வி பிக்பாஸ் வீட்டில் தன் வறுமை மிக்க கதை, மாமியாரின் துணை, முதல் கணவரின் பிரிவு, இரண்டாவது கணவர் பார்த்தசாரதியின் அரவணைப்பு, முதல் கணவரின் மகன் தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்டது, 2வது மகன் மேகவர்ஷனின் சுட்டித்தனம் என சகலத்தையும் கூறி இருந்தாஅர். பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை தாமரைச்செல்வி தொடக்கத்தில் ஏதும் அறியாதவராக இருந்ததாக பலரது பார்வையில் இருந்தது. போகப்போக தாமரைச்செல்வி அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்ளவும் செய்தார்.
போட்டியாளர்கள் சிலர் உண்மையில் தாமரை இயல்பே இதுதான் என்றும், சிலர் இது தாமரையின் இயல்பு அல்ல, அவர் ஏதும் தெரியாது என்று சொல்லி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்றும் கூறி வந்தனர்.
மக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள்
தாமரை செல்வியோ மக்கள் தன் பக்கம் இருக்கிறார்கள், யார் ஜெயித்தாலும் எனக்கு சந்தோஷம் தான், மக்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது உறுதியாக பல இடங்களில் கூறியிருந்தார். கமல்ஹாசன் நீங்கள் ஜெயிக்க வேண்டுமா என்று நேரடியாக முகத்துக்கு நேரே கேள்வி கேட்டபோதும் கூட, “இதற்கு முன்பு வரை அந்த எண்ணம் இல்லை சார் .. இப்போது என் மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது! நாடகக் கலைக்கும், மக்கள் என் மீது வைத்திருக்கும் அபிமானத்துக்கும் பாத்திரமாக நான் ஜெயிக்கவே விரும்புகிறேன்!” தெரிவித்திருந்தார். இதனைக் கேட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அரங்கத்தில் இருந்த அனைத்து பார்வையாளர்களும் கைதட்டினர்.
கோடி ரூபா வெச்சாலும் எடுக்க மாட்டேன்!
இந்த நிலையில் நிரூப் தாமரையிடம், “உனக்கு கடன் பிரச்சினை இருப்பதால், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஏன் நீ செல்ல கூடாது?” என கேட்டதற்கு தாமரை பதில் அளித்திருந்தார். அதில், “பயங்கரமா சம்பாதிக்கும் நம்பிக்கை வந்துடுச்சுடா.. அப்றம் என்னடா? இந்த வீட்ல வாழ்றத விட இந்த பணம் பெரிய விஷயமாடா? கோடி கணக்குல பணம் வெச்சா கூட நான் எடுக்க மாட்டேண்டா?!” என்று தெறிக்கவிடும் ஒரு பதிலை கூறியுள்ளார்.