குறும்பட நடிகை, செய்தி வாசிப்பாளர் மற்றும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் பனிமலர் பன்னீர்செல்வம்.
இவர், சமூக வலைதளங்களில், தனக்கும் தன்னுடன் ஆன்லைன் விற்பனை பொருட்கள் ரீதியாக டீலிங் வைத்திருக்கும் பெண்களுக்கும் தொடர்ச்சியாக சில ஆண்களால் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து காட்டமான வீடியோ ஒன்றை பதிவிட்டு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “திருநெல்வேலியில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக என்னுடைய டீமிடம் பேசியுள்ளார்கள். அப்போது ஒரு நாளைக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவாங்க? என்ன வேண்டுமானாலும் செய்வாங்களா? என்றெல்லாம் கேட்டுள்ளார்கள். மேலும், ஒரு லட்ச ரூபாய் தர்றோம். அவங்கள வந்து தங்க சொல்லுங்க என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள்.
இப்படி கேட்டதும் என் டீம் அவர்களை பிளாக் செய்து விட்டார்கள். இப்படி சமூக வலைதளங்களில் நேரலையில் வரக்கூடிய பெண்களுக்கு நிறைய சீண்டல்கள் தொடர்ந்து நடக்கின்றன. இந்த கொரோனா சூழலில் பல பெண்கள் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து வெளியே வருவதற்காக தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைனில் பொருட்களை விற்கின்றனர். அவர்களை சில ஆண்கள் தொந்தரவு செய்கிறார்கள். இந்த பெண்களின் பின்னால் சிரமப்படும் ஆண்களின் முயற்சியும், ஒரு குடும்பமும் இருக்கிறது.
தவிர, சிலருக்கு நேரலையில் நள்ளிரவில் வீடியோ கால்கள், தேவையில்லாத மெசேஜ்கள் பல வருகின்றன. திடீரென வந்த வீடியோ கால் ஒன்றை அட்டென்ட் செய்தால் நிர்வாணமாக நின்றிருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது?
உங்க வீட்டு பெண்களில் மூத்த பெண்கள் கையிலும் ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன ஆகும்? கொஞ்சம் யோசித்து பாருங்கள். உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இப்படித்தான் நடக்கும் என்கிற அறிவு வேண்டாமா?
இன்னும் சிலர், சமூக வலைதளங்களில் வந்து அதை காட்டு, இதை காட்டு, போட்டோ அனுப்பு என வெறி பிடித்த நாய்கள் போன்று திரியாதீர்கள்.. அப்படி விரக்தியாக இருந்தீர்கள் என்றால், இதை செய்வதற்கென்றே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் தாராளமாக பணம் கொடுத்துப் போங்கள். அது உங்கள் இஷ்டம்.
இல்லை உங்களுக்கு வக்கு இருந்தால் முறையாக காதல் செய்யுங்கள். திருமணம் செய்யுங்கள். எதையாவது செய்யுங்கள். ஊரில் இருக்கும் பெண்களை தொந்தரவு செய்யாதீர்கள். பொது தளத்தில் வந்து அசிங்கமாக பேசுவது இந்த வேலையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
இன்றைக்கு அரசு மாறிவிட்டது. உங்கள் வாட்ஸ் ஆப் நம்பர் மற்றும் சமூக வலைத்தள ஐடிக்கள் உள்ளிட்டவற்றை வைத்து, உங்களை தூக்குவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என நினைக்கிறீர்கள்?” என்று பனிமலர் பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “பெண்கள் தைரியமாக இருங்கள்.. இவனுங்க எல்லாம் கோழைகள். நீங்கள் இவர்களை இடது கையால் டீல் செய்துவிட்டு போய்க்கொண்டே இருங்கள். ஜாலியாக உங்கள் வேலையை பாருங்கள். ஆண்கள் நாகரீகமான ஆண்களாக நடந்து கொள்ளுங்கள்!” என கேட்டுக்கொண்டுள்ளார்.