ஆந்திராவில் அரசு சார்பில் மட்டுமே சினிமா டிக்கெட்டுகள் என்கிற பரபரப்பு திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டம் அமலுக்கு வருவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், ஆந்திர அரசு இதற்கான பேரவை ஒப்புதலை பெற்றுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி அரசு சார்புடைய சமூக வலை தளங்களில் குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப் படவுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கொரோனா சூழலில் மக்கள் டிக்கெட்டுகளை, அரசின் குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் இதனால், திரையரங்குகளுக்கு முன்பாக போக்குவரத்து பாதிப்பு குறையும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, இதன்மூலம் அதிக காட்சிகளை ஓட்டி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்று ஆந்திர திரைத்துறை தொடர்பான அமைச்சர் நானி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களில் தெலுங்கு திரைப் படங்கள் திரையிடப் படுவதால், இந்த இரு மாநிலங்களிலும் திரைப்பட திரையிடலுக்கான இந்த முறைகள் வேறுவேறாக இருக்கும் பட்சத்திலும், திரைப்பட கட்டணங்கள் மாற்றங்களுடன் இருக்கும்போதும், தயாரிப்பாளருக்கு இந்த புதிய சட்டத்திருத்தம் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.
தெலுங்கில் மிக முக்கியமாக, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய மற்றும் தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் அடுத்தடுத்து வருகின்றன.
அதன்படி, அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 1-ஆம் பாகம் டிசம்பர் 17-ஆம் தேதியும், “பாகுபலி” இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் & ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் ஜனவரி 7-ஆம் தேதியும், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் - யஷ் நடிப்பில் மெகா ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படத்தின் 2-ஆம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதியும் வெளியாகவுள்ளன. இந்த படங்களின் டிக்கெட்டுகளின் விலைகள் ஆந்திர அரசின் இணையதள டிக்கெட் விலைகளுக்குட்பட்டு விநியோகிக்க வாய்ப்பிருக்குமா? அதற்குள் இந்த சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுவிடுமா என்று ஒரு புறம் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அரசின் திரைப்பட ஒழுங்குமுறை தொடர்பான இந்த சமீபத்திய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி இருப்பதை போன்று, திரைப்பட டிக்கெட்டுகளின் விலையும் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருத்தலின் அவசியம் குறித்தும் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.