ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவது குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸால் தியேட்டர்கள் மூடப்பட்டதை தொடர்ந்து, ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஓடிடி ரிலீஸ் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இனி தியேட்டர்களில் வெளியாகும் சிறிய திரைப்படங்கள் 30 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பெரிய நட்சத்திரங்களின் படங்களை 50 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிடுமாறு பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார். இத்துடன் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் ஓடுவது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
அதில், மாஸ்டர் திரைப்படத்தின் லைசன்ஸ் வரும் வியாழக்கிழமை வரை தியேட்டர்களுக்கு தரப்படுவதாகவும், அதை தொடர்ந்து, மேலும் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் ஓட்ட விரும்பும் உரிமையாளர்கள், அந்தந்த மாவட்ட விநியோகஸ்தர்களிடம் பேசி, படத்தை தொடர்ந்து திரையிடுவது குறித்து முடிவுகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் குறித்து ஏதேனும் சிரமம் இருந்தால், அதை வாட்சப் குழுக்களில் விவாதிக்க வேண்டாம் எனவும் திரையரங்க உரிமையாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.