கடந்த ஜூன் 25 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான தெலுங்குப் படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’. ரவிகாந்த் இயக்கிய இப்படத்தை நடிகர் ராணாவின் குடும்ப நிறுவனமான சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சீரத் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை சில ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் சிலர் கடுமையான கண்டனங்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இன்று ட்விட்டரில் ‘#BoycottNetflix' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இதற்குக் காரணம் ஹிந்துக் கடவுளான கிருஷ்ணரையும், ராதாவையும் இப்படத்தில் தவறாகச் சித்தரித்துள்ளதாக ரசிகர்கள் கொதித்துள்ளனர். இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்பும் ஆவேசக் கண்டனங்களும் எழுந்துள்ளன. போலவே அனுஷ்கா சர்மா தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ‘புல்புல்’ திரைப்படத்துக்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அப்படத்திலும் ஹிந்து மதத்துக்கு எதிரான வசனம் இடம் பெற்றுள்ளதாக நெட்டிஸன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கும் #BoycottNetflix என்ற ஹேஷ்டேகைப் பயன்படுத்தி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாய்காட் நெட்ஃப்ளிக்ஸ் என்ற ஹேஷ்டேக் போட்டு இப்படங்களை உடனடியா தடை செய்ய வேண்டும் என்றும், நெட்ஃப்ளிக்ஸை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் பல டிவிட்டர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.