இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் கொரோனாவுக்கு எதிரான போரில் தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாக மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை ஆங்காங்கே இருக்க ஒருபுறம் உயிரிழப்புகள் நடப்பதும் வேதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இதனிடையே அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை முடுக்குவதிலும், மக்களுக்கான மருத்துவ சேவைகளை அளிப்பதிலும் இறங்கியிருக்கிறது. இன்னொருபுறம் இந்தியா மட்டுமல்லாமல் தமிழகம் உட்பட பல இடங்களில் பொது முடக்கங்கள் சற்றே கடுமையாக அமல்படுத்தப் பட்டுள்ளன. இப்படி கொரோனா பரவும் விகிதத்தை கட்டுப்படுத்துவதற்கான இந்த முயற்சியில் அடிப்படை வழிமுறைகளாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி உள்ளிட்டவை உலக நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் தமிழகத்திலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தற்காப்பு முறையாக இந்தியா மற்றும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டும் பரிந்துரைக்கப்பட்டும் வருகிறது. பிரபலங்கள் ரஜினி உட்பட பலரும் இந்த தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், “ப்ளீஸ்.. ப்ளீஸ்.. தடுப்புசி போட்டுக்கொள்ளுங்கள். பாதுகாப்பாய் இருங்கள் .. வீட்டுக்குள்ளேயே இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.