முக்தா சீனிவாசன் தயாரிப்பில், கமல்ஹாசன் நடிப்பில் 1987ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் நாயகன். இந்திய அளவில் பேசப்பட்ட இந்த திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார்.
இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படத்தில், “நிலா அது வானத்து மேலே” என்கிற ஒரு குத்துப்பாடல் இடம் பெற்றிருக்கும். ஜனகராஜ் மற்றும் குயிலி இருவரும் நடனம் ஆடிய இந்த பாடல் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த, பாடலாக அமைந்தது.
ஆனால் இந்த பாடல் ஒரு மெலடி பாடலாக வரவேண்டிய பாடல் என்றும் இயக்குனரின் விருப்பத்தால் இந்த பாடல் ஒரு குத்துப்பாடலாக மாறியதாகவும், இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பெங்காலி மொழியில் இதே ட்யூன் ஒரு மெலோடி - பக்தி பாடலாக நவராத்திரியை முன்னிட்டு வெளியாகி வைரலாகி வருகிறது. இளையராஜா இப்படி, தமது பாடல்கள் தொடர்பான நிறைய ரகசியங்களையும் சுவாரஸ்யங்களையும் சமீப காலமாக வெளியிட்டு வருகிறார்.
இதேபோல் மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பேர் வெச்சாலும்’ பாடல் அண்மையில் சந்தானம் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வெளியான ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் ரீமேக் பாடலாக இடம் பெற்றது.
இதனை அடுத்து, டிக்கிலோனா படம் வெளியான சமயத்தில் ‘துப்பார்க்கு துப்பாய’ திருக்குறளில் இருந்து அந்த பாடல் பிறந்த கதையை இளையராஜா வீடியோவாக வெளியிட்டு சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.