மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சபாகேசன் இணைந்து தயாரித்துள்ள இந்த "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று Netflix தளத்தில் 190 நாடுகளில் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தை மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
இந்த படத்தின் ஒரு பகுதியாக ரதீந்திரன் பிரசாத் இயக்கிய ‘இன்மை’ பகுதி குறித்து நடிகர் சித்தார்த் கூறும்போது, “மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ பகுதியில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சி அடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதன் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.
இன்மை என்கிற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். COVID-ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம்” என்றார்.