"நவரசா" ஆந்தாலஜி படத்தில் இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மிகச்சிறந்த அனுபவம் என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர், "நவரசா" ஆந்தாலஜி படத்தில், லக்ஷ்மி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் 190 நாடுகளில் வெளியாகிறது.
இப்படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்தும், இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது குறித்தும், நடிகை ரம்யா நம்பீசன் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில், “எனது கதாப்பாத்திரத்தில் சிறு வயது தோற்றத்திலும், முதிய வயது தோற்றத்திலும் நானே நடிப்பதாக, என்னிடம் கூறியபோது, எனக்கு சற்று குழப்பமாக இருந்தது.
முதிய வயது தோற்றத்தை, என்னால் சரியாக செய்ய முடியுமா எனத் தயங்கினேன்.
இயக்குநர் பிரியதர்ஷன் ஒவ்வொரு காட்சியையும் மிகப் பொறுமையாக சொல்லிக்கொடுத்து, படப்பிடிப்பில் மிக ஆதரவாக பார்த்துக் கொண்டார். அவரால் தான் இப்படத்தில் நடிப்பது எளிமையானதாக இருந்தது. மிகப்பெரும் ஆளுமையான இயக்குநர் பிரியதர்ஷன் அவர்களுடன் பணியாற்றியது, மறக்க முடியாத, மிகச்சிறந்த அனுபவம்” என்று ரம்யா குறிப்பிட்டுள்ளார்.
நவரசா படத்தொகுப்பின் சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை) எனும் கதையில் ரம்யா நம்பீசன் ஆசிரியராக நடித்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த பகுதியில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு நடித்துள்ளனர்.
9 இயக்குநர்கள் இயக்கியுள்ள, "நவரசா" படம், மனித உணர்வுளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு 9 வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.
ALSO READ: நவரசா-வில் சம்பவம் செய்ய காத்திருக்கும் வேறலெவல் ‘பெண் கதாபாத்திரங்கள்’ பத்தி தெரியுமா?