மனித உணர்வுளின் 9 ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படமாக "நவரசா" உருவாகியுள்ளது.
Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் குறும்படங்கள் மூலம் விருதுகளை வென்று, திரைத்துறையில் நுழைந்து கவனம் ஈர்த்த, இயக்குநர் கார்த்திக் நரேன், விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் "புராஜக்ட் அக்னி" பகுதியினை இயக்கியுள்ளார்.
"புராஜக்ட் அக்னி" பகுதியினை இயக்கியது குறித்து இயக்குநர் கார்த்திக் நரேன் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
"நவரசா' படத்தை பொறுத்தவரை, அதன் அத்தனை அம்சங்களுமே எனக்கு மிகப்பெரும் பாடத்தை கற்றுத்தந்த பெரிய பயணம் ஆகும். சயின்ஸ் பிக்சன் வகையில், ஒரு புதுமையான கனவு முயற்சி தான் இப்படம்.
இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் தயாரிக்கும் வேலைகளை ஒழுங்குபடுத்தியவுடன், முதலில் நான் அரவிந்த் சாமி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரைத் தான் தொடர்பு கொண்டேன்.
இவர்கள் இருவருடனும் ஏற்கனவே நான் பணிபுரிந்துள்ளேன். அரவிந்த சாமி அவர்களை பொறுத்தவரை அவர் படப்பிடிப்பில் காட்சியை தனது நடிப்பின் மூலம் நிறைய மேம்படுத்துவார். கதாப்பாத்திரங்களை சரியாக வெளிப்படுத்தும் பொருட்டு, அரவிந்த் சாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகியோர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
அனைத்து நடிகர்களும் இத்திரைக்கதையில் அழகாக பொருந்தியுள்ளார்கள். இதனால் படம் மிக அற்புதமாக வந்துள்ளது என்றார்.