பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறனின் பிறந்த நாள் இன்று (செப் 4.).
பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன் பிற்காலத்தில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் திரையுலகில் அறியப்படத் தொடங்கினார். அவர் இயக்கிய திரைப்படங்களில் ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட திரைபடங்கள் தேசிய விருதுகளை வென்றுள்ளன.
இதில் அசுரன் திரைப்படம் சிறந்த மாநில மொழிப் படத்துக்காகவும் மற்றும் சிறந்த நடிகருக்காக தனுஷ்க்கும் என 2 தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
இதேபோல், மு.சந்திரகுமாரின் நாவலான லாக்கப் நாவலை அடிப்படையாக வைத்து உருவான ‘விசாரணை’ திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. வெனிஸ் சரவதேச விழாவில் கவுரவிக்கப்பட்டது.
அதன் பின்னர் வெற்றிமாறன் சங்கத்தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை தமது Grass Root பிலிம் கம்பெனியின் கீழ் தயாரித்திருந்தார்.
தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை எல்ரெட் குமாரின் rs infotainment தயாரிக்கிறது.
இதேபோல் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்குகிறார். சி.சு.செல்லப்பாவின் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில்தான் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடிகர் ஹரீஷ் கல்யாண் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ஹரீஷ் கல்யாண் இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் ‘பொறியாளன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அண்மையில் சிம்புதேவன் இயக்கத்தில் ‘கசடதபற’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணின் நடிப்பு முக்கியமாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.