தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.
தமிழ் சினிமாவின் திசைவழிப்போக்கை மாற்றிய இயக்குனர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இவரின் பெயரை எவராலும் தவிர்க்க முடியாது. இயக்குனர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்து “அட்டக்கத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “மெட்ராஸ்” திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித்.
“மெட்ராஸ்” படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர்ச்சியாக கபாலி, காலா என இரண்டு படங்களை கொடுத்து இருந்தார். இதில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்தது. இதற்கிடையே நீலம் புரொடக்சன்ஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல குறும்படங்களையும், “பரியேறும் பெருமாள்”, “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”, கிறிஸ்துமசை முன்னிட்டு வெளியாக உள்ள 'ரைட்டர்' போன்ற படங்களையும் தயாரித்துள்ளார்.
கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளை கதைக்களமாக வைத்து இந்த படம் உருவானது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படம் “நட்சத்திரம் நகர்கிறது” என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஒரு காதல் Drama திரைப்படமாக எடுத்துள்ளார். இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய டென்மா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளாவில் படப்பிடிப்பு நடத்தி படப்பிடிப்பை படக்குழு நிறைவுச்செய்துள்ளது. இதனை BTS புகைப்படத்தை பகிர்ந்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர் காளிதாஸ் ஜெயராம் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.