இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தல்…
நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன்.23ம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் நாசர், கார்த்தி, விஷாலின் பாண்டவர் அணியினரும், பாக்யராஜ், ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தடை…
இந்நிலையில், துணைநடிகர் பெஞ்சமின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த தேர்தலில் தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்றும், அதனால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்றும் வழக்குத் தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே நடிகர் விஷால் தொடர்ந்த ரிட் வழக்கில் வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டாலும், முடிவுகளை வெளியிட கூடாது என்று தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தவும் முடிவுகளை அறிவிக்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
வாக்கு எண்ணிக்கையும் முடிவும்…
அதன் படி நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், கார்த்தி, விஷால், பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் ஆகியவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாண்டவர் அணியினர் மீண்டும் நடிகர் சங்க பொறுப்புகளைக் கையில் எடுத்துள்ளனர்.
வெற்றிக்குப் பின் பேசிய தலைவர் நாசர்
மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் நாசர் ‘வணக்கம், வருங்காலத்துல வேலைகள் எல்லாம் மடமடவென நடக்கும்னு எதிர்பார்க்குறோம். நாங்க ரெண்டு வருஷமா காத்துருக்கோம். எங்க காத்திருப்பு நிறைவடஞ்சிருச்சுனு நெனக்கிறோம். இனிமே எங்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை பத்திதான் எண்ணம். நாங்க எடுத்துகிட்ட வேலையின் பளு 100 மடங்கு அதிகமாகி இருக்கு. அப்போது நிரூபர்கள் குறுக்கிட்டு கேள்வி கேட்க ‘தம்பி… தம்பி இன்னைக்குதான் தம்பி ஒன்னா கூடியிருக்கோம். நாளையில இருந்து செயற்குழு அமைக்கனும், பொதுக்குழு அமைக்கனும். நிச்சயமா விடுபட்ட எல்லா வேலைகளும் செய்ய ஆரம்பிப்போம். முதலில் செயற்குழு கூட்டி முடிவெடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.
பொருளாளர் தேர்தலில் வெற்றி பெற்ற கார்த்தி
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்ற நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது ’எல்லாருக்கும் வணக்கும் 2015-2019 வர நடிகர் சங்க வரலாற்றுல முக்கியமான ஆண்டுகள். நடிகர் சங்க உறுப்பினர்கள் அடஞ்ச பயனாகட்டும். அந்த பெரிய கட்டடம் ஆகட்டும். அது எங்க டீமோட அயராத உழைப்பு. அதுக்கப்புறம் ரெண்டு வருஷம் தடைபட்டு போச்சு. அது ரொம்ப வருத்தமான விஷயம். ஆனா இன்னைக்கு கெடச்சிருக்க வெற்றி முக்கியமானது. 2 வருட சட்டபோராட்டத்துக்கு பிறகு கிடைத்த முக்கியமான வெற்றி.. இப்ப கிடைச்சுருக்குற பொறுப்ப வச்சு அந்த கட்டிடத்த முடிக்கணும்கிறதுதான் எங்களோட ஆச. மக்களுக்கும் எங்க டீமுக்கும், மீடியாவுக்கும் நன்றி’ எனக் கூறினார்.