விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இத்திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த தொலைக்காட்சி நகைச்சுவை பிரபலம் லோகேஷ்.
அதன் பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதம், பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்ட லோகேஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவிகளை வழங்கினார். பின்னர் சர்ஜரி முடிந்து லோகேஷ் உடல் நலம் குணமாகி வீடு திரும்பினார்.
பலரும் லோகேஷின் இயல்பான குணத்துக்காகவும் நடிப்புக்காகவும் அவருக்கு ரசிகர்களானதை அடுத்து லோகேஷ் நல்லபடியாக மீண்டும் குணமாகி மீண்டு வர பிரார்த்தனை செய்தனர்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ்க்கு தமது தாயாருடன் இணைந்து பிரத்தியேக பேட்டியை அளித்துள்ள லோகேஷ், தான் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது தன்னைச் சுற்றி தனக்காக ரசிகர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள் என்கிற மன உறுதியுடன் இருந்ததாகவும், தன் அம்மாவுக்கு பிடித்த மணப்பெண் தான் வரவேண்டும் என்றும் 28 வயதாகியும் பீச், சினிமா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் மட்டுமே தான் செல்வதாகவும் ஜாலியாக கூறினார்.
லோகேஷ் பற்றி பேசிய அவரது தாயார், தன் மகன் தனக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்வார் என்றும், அதனாலேயே அவரை தனக்கு பிடிக்கும் என்றும் அவருக்கு 2023ல் திருமணம் செய்யலாம் என்றிருப்பதாகவும் அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில், தான் போகாத கோயிலே இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் லோகேஷ் இன்னும் தனக்கு குழந்தை போல தான் என்று கூறும் அவரது தயார், இப்போதும் கூட அவருக்கு, தான்தான் முகச்சவரம் செய்துவிட்டதாகவும் மனம் நெகிழ குறிப்பிடுகிறார். இவர்களின் முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.