பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார் - திரையுலகினர் அஞ்சலி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நாஞ்சில் நளினி நேற்று (19.01.2020) மதியம் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம்  இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை நாஞ்சில் நளினி அவர்கள் மரணம் அடைந்தார் என்ற செய்தி  மிகவும் வேதனை அளிக்கிறது. நாடகத் துறையிலிருந்து திரைத்துறைக்கு வந்த நடிகைகளில் நாஞ்சில் நளினிக்கு முக்கிய இடம் உண்டு.

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், தக்கலை இவரது சொந்த ஊர்.  12-ஆவது வயதில் நடிக்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, திருநெல்வேலியிலுள்ள அமெச்சூர் நாடக குழு ஒன்றில் நடிக்கச் சேர்ந்தார். நால்வர்’ என்னும் சமூக நாடகத்தில் 12-ஆவது வயதிலேயே 4 கதாநாயகர்களின் அம்மாவாக நடித்தவர். பின்னர் ‘வைரம்’ நாடக சபாவில் சேர்ந்து நடிப்பை விரிவுபடுத்திக் கொண்டார்.

சினிமாவில் பி.மாதவனின் இயக்கத்தில் 1969-இல் வெளிவந்த வெற்றிப்படமான ‘எங்க ஊர் ராஜா’ வில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார்.  அதிலிருந்து சிவாஜிகணேசனின் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிவாஜியின் ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘தீர்ப்பு’ போன்றவை இவருக்கு நடிப்பை வெளிப்படுத்த அமைந்த படங்கள். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நாடகங்கள், சினிமா என்று வாழ்ந்து வந்த நேரத்தில் இவர்  தனியாக  ‘ரேவதி ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார். பட வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் இவருக்கு மறு ஜென்மம் கொடுத்தது சின்னத்திரை. குட்டி பத்மினியின் ‘மந்திர வாசல்’ தொடர்தான் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் இவரை சரியாகக் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து நடிகர் மோகனின் ‘அச்சம் மடம் நாணம்’, ’பிருந்தாவனம்’, ‘சூலம்’, போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.1978-இல் தமிழக அரசு இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி கௌரவித்தது. இவருக்கு ஒரு மகனும் இரண்டு  மகள்களும் உள்ளனர். நாஞ்சில் நளினி அவர்களது இழப்பு நாடக மற்றும் திரைப்பட துறைக்கு மாபெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு உற்றார் உறவினர் துக்கத்திலும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்."

தொடர்புடைய செய்திகள்

Nanjil Nalini died old tamil movie and serial actress and character artist

People looking for online information on Nanjil Nalini will find this news story useful.