2020 ஆம் ஆண்டுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, புது டில்லியில் இன்று (30.09.2022) நடைபெற்றது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு விழாவுக்கு தலைமை தாங்கி திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கினார். மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இதில் தமிழகத்தை சார்ந்த சினிமா கலைஞர்கள் பலர் விருது பெற்றனர்.
சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அபர்ணா பாலமுரளியும், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரும் வென்றுள்ளனர். மேலும், சூரரைப் போற்று படத்திற்காக, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, ஷாலினி உஷாதேவி ஆகியோர் வென்றனர். மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதை 2டி நிறுவனம் கைப்பற்றியது. இதனை நடிகை ஜோதிகா பெற்றுக் கொண்டார்.
அதே போல, இளம் இயக்குனர் மடோன் அஸ்வின், 'மண்டேலா' படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றார். சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனகர்த்தா ஆகியவற்றிற்கு மடோன் அஸ்வினுக்கு விருது கிடைத்திருந்தது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையில் இருந்து அனைவரும் விருதுகளை பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நாட்டுப்புற பாடகியான நஞ்சம்மா தேசிய விருது வாங்கிய சமயத்தில் நடந்த சம்பவம், இணையவாசிகள் பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
64 வயதாகும் நாட்டுப்புற பாடகியான நஞ்சம்மா, மலையாளத்தில் வெளியாகி இருந்த "ஐயப்பனும் கோஷியும்" என்ற படத்தில் பாடல் ஒன்றை பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருதினை அவர் வென்றிருந்தார். தொடர்ந்து, இன்று மேடையில் ஏறி, ஜனாதிபதி ரௌபதி முர்மு கையில் இருந்து அவர் விருதினை வாங்கிக் கொண்டார்.
முன்னதாக, பாடகி நஞ்சம்மா மேடையில் ஏறியதும் அரங்கில் இருந்த ஒட்டுமொத்த பிரபலங்களும் எழுந்து நின்று கைத்தட்டி நஞ்சம்மாவை கவுரவித்திருந்தனர்.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த நஞ்சம்மா, ஐயப்பனும் கோஷியும் என்ற திரைப்படம் மூலம், தங்களின் நாட்டுப்புற பாடல்களை பாடி தற்போது தேசிய விருதையும் கையில் பெற்றுள்ள சம்பவம், பலரது பாராட்டுக்களையும் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.