சென்னை, 25 ஜனவரி 2022: பிரமாண்டமும், அழகும் நிறைந்த மீனாட்சி அம்மன் திருக்கோவில், தெவிட்டாத சுவை கொண்ட ஜிகர்தண்டா, வாசனையால் ஊரையே கிறங்கவைக்கும் மதுரை மல்லி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் தாயகம் ஆகியவற்றிற்காக புகழ் பெற்றிருக்கும் மதுரை, மற்றுமொரு சிறப்பான அடையாளத்தைப்பெற இப்போது தயாராக இருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ச்சி கண்டு வரும் பொது பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், மேற்கூறப்பட்ட இந்த பிரபலமான அம்சங்களை பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் புதிய புதின நெடுந்தொடரான நம்ம மதுரை சிஸ்டர்ஸ், நிகழ்ச்சியின் மாபெரும் ப்ரீமியம் ஒளிபரப்பின் மூலம், மதுரைக்கே உரித்தான தனித்துவ அடையாளங்களுள் தன்னையும் இணைத்துக் கொள்ளவிருக்கிறது என்பது நிச்சயம்.
நான்கு சகோதரிகளின் பயணத்தை அழகாக காட்சிப்படுத்தும் ஒரு சிறப்பான முன்னோட்ட விளம்பரத்தை இந்தச் சேனல் இப்போது அறிமுகம் செய்திருக்கிறது. தங்களது இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்த இந்த சகோதரிகளின் போராட்ட வாழ்க்கையை பல்வேறு காலகட்டங்களில் காட்டும் இந்த ப்ரோமோ இறுதியில் அவர்கள் எப்படி வெற்றிகரமான நபர்களாக உருவெடுத்தனர் என்பதை காட்டுகிறது. போட்டி, எதிர்ப்பு மனப்பான்மை மற்றும் குடும்பப் போட்டிகளுக்கு மத்தியில் சகோதரிகளின் பாசம் மற்றும் நேசத்தை நேர்த்தியாக எடுத்தியம்பும் நம்ம மதுரை சிஸ்டர்ஸ், பார்வையாளர்களின் மனங்களை தன்வசப்படுத்தும் என்பது நிச்சயம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி, பல்வேறு உணர்வுகளின் சங்கமமாக இருக்கும்.
மதுரை மாநகரின் சாரத்தை அழகாக படம் பிடித்துக்காட்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கதையான நம்ம மதுரை சிஸ்டர்ஸ், நான்கு சகோதரிகளின் கதையை சித்தரிக்கிறது. இந்திராணி (நடிகை சாயா சிங் நடிப்பில்), மேகலா (நடிகை சுனிதா நடிப்பில்), புவனா (நடிகை சுகன்யா நடிப்பில்) மற்றும் காவ்யா (நடிகை இரா அகர்வால்) என்ற இந்த நான்கு சகோதரிகளும், அவர்களது அன்புக்குரிய அம்மா அன்னலட்சுமியின் நினைவைப் போற்றுகின்ற “அன்னம் அங்காடி” என்ற பெயரிலான பல்பொருள் அங்காடியில் பல ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு வெற்றியை சுவைக்கும் வரலாற்றை சுவைபட இது எடுத்துச் சொல்கிறது.
இந்த நெடுந்தொடர் சுவையை இன்னும் உயர்த்தும் வகையில் வாழ்க்கை முழுவதும் கடும் சவால்களை எதிர்கொண்டு எதிர்நீச்சல் அடித்து திரையுலகில் தனக்கென்ன தனி தளம் பதித்திருக்கும் பார்வைத்திறன் பாதிப்புள்ள பாடகியான வைக்கம் விஜயலட்சுமியின் மனதை மயக்கும் பாடலும் அமைந்திருக்கின்றன. எத்தனை சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த வாழ்க்கையும், உலகமும் அவர் மீது சுமத்திய எண்ணற்ற சவால்களை வென்று இன்றைக்கு புகழின் உச்சியை பாடகி விஜயலட்சுமி எட்டிப்பிடித்திருக்கிறார்.
பாடகி விஜயலட்சுமி மற்றும் இவர் போன்று கடும் பாதிப்புகளை சாதனைகளாக மாற்றியிருக்கும் தைரியம் வாய்ந்த பிற பெண்களின் வாழ்க்கையிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதின நெடுந்தொடர், பெண்களின் பல்வேறு பரிமாணங்களையும் அவர்கள் வாழ்க்கையில் காட்டும் தைரியம் மற்றும் மனஉறுதியும் நெஞ்சைத் தொடும் வகையில் வெளிப்படுத்துகிறது. ஸ்ரீ நந்திமேடு செல்லியம்மன் மூவிஸ் (SNS Movies) தயாரிப்பில், வெளிவரவிருக்கும் இந்நிகழ்ச்சி 2022 பிப்ரவரி 21 – ம் தேதி அன்று இரவு 7.00 மணிக்கு தனது முதல் ஒளிபரப்பை தொடங்கவிருக்கிறது.