செப்டம்பர் 27-ஆம் தேதி, பழம்பெரும் நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ் அவர்களின் பிறந்த நாள் . 1933-ஆம் ஆண்டு பிறந்த நாகேஷ் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்ததுடன் ‘எதிர்நீச்சல்’, ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார்.
பின்னாட்களில் நாகேஷ் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காம ராஜன், அபூர்வ சகோதரர்கள், பஞ்ச தந்திரம், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் வில்லனாக நாகேஷ் மிரட்டியிருப்பார்.
இந்நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன், இன்றைய தினம் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், “நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதித்த நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த தினம் இன்று. 1000 படங்களுக்கும் மேல் நடித்து மக்களை மகிழ்வித்தவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. அவரது நினைவைப் போற்ற தமிழக அரசு ஆவன செய்யவேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே நாகேஷ் அவர்களின் பேரனான பிஜேஷ் நாகேஷ், நாகேஷை நினைவுகூர்ந்ததுடன் ஜே.கே.ரவுலிங் எழுதிய புகழ்பெற்ற ஹாரி பாட்டர் நாவல் பின்னாளில் 7 பார்ட்களாக படமானதை குறிப்பிட்டு, இதன் ஆரம்பத்தில் ஹாரி பாட்டர் மாடிப்படியின் கீழ் வாடகைக்கு தங்கி வந்ததை ஒப்பிட்டு, அதற்கும் முன்பே இதே காட்சியை நாகேஷ் அவர்கள் எதிர்நீச்சல் படத்தில் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆம். நடிகர் நாகேஷ் எதிர் நீச்சல் படத்தில் மாது எனும் ஆதரவற்ற கேரக்டராக, ஒரு குறிப்பிட்ட குடும்பவாசிகளுக்கு நடுவே மாடிப்படியின் கீழ் தங்கி வாழ்ந்து வாழ்வில் எதிர்நீச்சல் போடும் கேரக்டராக நடித்திருப்பார்.
இதைத்தான் நடிகர் பிஜேஷ் நாகேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். நடிகர் பிஜேஷ் நாகேஷ், தனது தாத்தாவின் பொன்னான தமிழ் சினிமா நாட்களை நினைவுகூர்ந்துள்ளார்.
நடிகர் பிஜேஷ் நாகேஷ், சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக வாய்ப்பிருப்பதாக சந்தானம் ஒரு இன்ஸ்டாகிராம் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமும் நாகேஷ் நடித்த கிளாசிக் காமெடி சூப்பர் ஹிட் திரைப்படம் என்பதும், அதே தலைப்பில், அதே சர்வர் கேரக்டரில் சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.