நடிகர் நாகார்ஜூனா நடித்துள்ள இரட்சன் – தி கோஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
இப்படத்தை பிரவீன் இயக்கியுள்ளார். தினேஷ் சுப்பராயன் மற்றும் கிச்சாவும் சண்டை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். பரத் சௌரப் மற்றும் மார்க்கே ராபின் இசையமைப்பாளர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். ஒளிப்பதிவினை முகேஷ் கவனித்துக்கொள்ள, தமிழில் இப்படத்தை டிரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு விநியோகிக்கிறார். சோனி மியூசிக் இப்படத்தின் ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. சரத் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
துபாய், ஊட்டி போன்ற இடங்களில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாகார்ஜூனாவுடன் நடிகை சோனல் சௌகான் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகர் நாகார்ஜூனா, “நானும் இங்கு தான் பிறந்து வளர்ந்தேன். பிறகு என் அப்பா என்னை ஹைதரபாத் அழைத்துச் சென்றார். ஒவ்வொரு முறையும் நான் சென்னை வரும் போது, சொந்த ஊருக்கு திரும்ப வரும் சந்தோஷம் கிடைக்கிறது. கிண்டி பொறியியல் கல்லூரியில் தான் படித்தேன். சென்னையில் எல்லா இடங்களும் எனக்கு பரிச்சயம் தான்.
மணிரத்னம் சாரை மணி என்று தான் அழைப்பேன். பொன்னியின் செல்வன் – 1 படத்திற்காக மணிக்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வன் மிக பெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படத்தில் நடித்த விக்ரம்க்கு வாழ்த்துக்கள். என் தம்பி கார்த்திக்கு வாழ்த்துக்கள். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள். நான் தமிழில் ரட்சகன் படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே மணிரத்னம் இயக்கிய கீதாஞ்சலி படத்தின் மூலம் பிரபலமடைந்தேன்.
அவருடன் கீதாஞ்சலி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மறக்க முடியாது. பொன்னியின் செல்வன் – 1 படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம் அனைவரும் நன்றாக நடித்திருந்தார்கள். உதயம் படத்தில் மக்கள் என்னைப் பாராட்டினார்கள். பிறகு, ரட்சகன் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான தோழா படமும் வெற்றியடைந்தது. தோழா படத்தில் கார்த்தியுடன் நெருக்கம் ஏற்பட்டது. அப்படத்தை மக்கள் கொண்டாடினார்கள். விமர்சனங்களும் நன்றாக கொடுத்திருந்தார்கள். அதேபோல் பயணம் படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
முதலில் இரட்சன் படத்தை தமிழில் வெளியிட யோசனை இல்லை. பிற மொழிகளில் வெளியிட வேண்டும் என்று யோசித்தபோது, தமிழில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். அதற்கு தமிழில் மொழிபெயர்த்து கொடுத்த அசோக் அவருக்கு நன்றி. தமிழில் நான்தான் டப்பிங் பேசி இருக்கிறேன். தமிழ் உச்சரிப்பிற்கு உதவிகரமாக இருந்தார். இப்படம் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகிறது. கொரோனாவிற்குப் பிறகு சமீபகாலமாகத்தான் மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள்.
மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும் இயக்குநர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். அதில் ஒருவர் இயக்குநர் பிரவீன். இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனத்தை பிரவீனும், சண்டைக் காட்சிகளை தினேஷும் சொல்லிக் கொடுத்தார்கள். ஒளிப்பதிவிலும் காட்சி அமைப்புகள் சிறப்பாக வந்திருக்கிறது என்றார். சாமுராய் கத்தி வைத்து சண்டையிடும் காட்சிகள் உள்ளது. அதற்காக பயிற்சிகள் மேற்கொண்டோம். இப்படத்தில் நடனக்காட்சியை சண்டை கலந்த ஒரு நடனமாக அமைத்துள்ளோம். நிச்சயம் அது புதுமையான ஒரு அனுபவத்தை தரும்” என்றார்.