தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கர்தாஸ் அணியின் தலைவர் கே.பாக்யராஜ், Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார். தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இரு அணியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் சங்கர்தாஸ் அணியின் தலைவர் கே.பாக்யராஜ், Behidnwoods-தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அவர் பேசுகையில், ‘நடிகர் சங்க தேர்தலில் போட்டிய்யிடும் தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி மரியாதை நிமித்தமாக கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோரை சந்தித்தோம். கடந்த தேர்தலில் ‘பாண்டவர்’ அணியில் இருந்து அதிருப்தி காரணமாக பலரும் அங்கிருந்து விலகி வந்துள்ளனர். தலைமை என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும், எளிதில் அணுகும்படி இருப்பது மிகவும் அவசியம். இவை இல்லாத காரணத்தாலே அதிருப்தி ஏற்பட்டது’.
‘கடந்த தேர்தலில் புதிதாக களம் காணும் பாண்டவர் அணி மீது பலருக்கும் எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில், நடிகர் சங்க பொறுப்பில் இருந்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல், பொதுத் தேர்தலில் விஷால் போட்டியிட்டது பலருக்கும் அதிருப்தி அளித்தது. இது தவிர தனிப்பட்ட முறையில் விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தும் முடியாமல் போன காரணத்தாலேயே தனி அணி உருவானது’.
‘தற்போதைய தேர்தலில் சுவாமி சங்கர்தாஸ் அணி வெற்றி பெற்றால், நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கும், நாடக கலைஞர்களின் நலனுக்கும் உதவும் வகையில் திரைப்படங்கள் எடுத்து, அதில் வரும் வருமானத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறோம்’.
‘நிதி நெருக்கடியில்லாமல் கட்டிட பணிகள் துரிதமாக நடக்கும். நாடக கலைஞர்கள் குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், நலிந்த நாடக கலைஞர்களுக்கு பொங்கல், தீபாவளி என்றில்லாமல், மாதம் ஒருமுறை உதவித்தொகை, குற்றம் சொல்லும் அளவிற்கு எங்களது செயல்பாடுகள் இருக்கும். சங்கத்தில் இருப்பவர்கள் மீண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் தலைமை ஏற்பதால் ஒறுமைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என கூறினார்.