நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கர்தாஸ் அணியினர் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரிய நிலையில், பாண்டவர் அணியினர் தற்போது சந்தித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார்.
இந்தத் தேர்தலில் நாசர் தலமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். இதையடுத்து, இரு அணியிரனரும் முக்கிய நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கர்தாஸ் அணியினர் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினர். அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், எவ்வித கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படாமல் நடிகர் சங்க கட்டிடம் 6 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். அதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த விஷால் தரப்பினர், ‘30 ஆண்டுகளில் செய்ய முடியாததை 3 ஆண்டுகளில் தங்கள் அணி நிறைவேற்றியிருப்பதாகவும், சொன்னது மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்திருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை தாண்டி கட்டிடத்தை கொண்டு வருவோம்’ என கூறினார்.