தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’-யை எதிர்த்து கே.பாக்யராஜ் தலைமையிலான ‘சங்கர்தாஸ் சுவாமிகள்’ அணியினர் களமிறங்குகின்றனர்.
வரும் 2019-2022ம் ஆண்டுகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆா் ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையேற்று நடத்துகிறார்.
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இரு அணியினரும் வேட்பு மனு தாக்கல், தேர்தல் அறிக்கை போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் சங்கர்தாஸ் அணியில் இருக்கும் நடிகர், தயாரிப்பாளர் உதய Behidnwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அதில், ‘பாண்டவர் அணி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே வெளியே வந்து சுயட்சையாக தேர்தலில் நிற்க விரும்பினேன். ஆனால், என்னை போல் அதிருப்தியில் இருந்த அனைவரும் தற்போது ஓரணியாக இணைந்து அனுபவம் வாய்ந்த கே.பாக்யராஜ் தலைமையில் ‘சங்கர்தாஸ் அணி’ சார்பாக போட்டியிடுகிறோம்’.
‘பாண்டவர் அணியில் நிறைய விஷயங்களில் உடன்பாடில்லை. ஒரு பொதுச் செயலாளராக விஷால் தனது பொறுப்பில் இருந்து ஏதும் செய்யவில்லை. தனக்கு ஒரு இமேஜ் தேவை என்பதற்காக எல்லோரையும் பயன்படுத்திக் கொள்கிறார். மீடியாவுக்காக வாழும் விஷால், நடிகர் சங்க கட்டிடத்தை நாங்கள் தடுக்க முயற்சிப்பதாக பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்’.
‘பாண்டவர் அணியில் இருப்பவர்களும் அதிருப்தியில் இருப்பது எனக்கு தெரியும். சங்க கட்டிடத்தை தவிர நாடக நடிகர்களின் வாழ்வாதாரம், நடிகர்-நடிகையரின் பாதுகாப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கின்றன. சங்கர்தாஸ் அணி அவற்றை கருத்தில் கொண்டு பணியாற்றுவோம். விஷால் இந்த தேர்தலில் ஜெயிப்பதற்காக எதுவும் செய்ய துணிந்தவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். தற்போது நடிகர் விஜய்யின் படம் பின்னி மில்லில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் நடிகர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் ஒருவர் கூட பணியாற்றவில்லை. அனைவருக்கும் பணம் கொடுத்து தனது அலுவலகத்தில் சாப்பாடு போட்டு வைத்திருக்கிறார் விஷால்' என பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.