தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குனர் & வசன கர்த்தா ஆரூர்தாஸ் நேற்று மாலை 6:40 மணிக்கு அவரது இல்லத்தில் தன்னுடைய 91வது வயதில் இயற்கை எய்தினார்.
Also Read | எம்ஜிஆர், சிவாஜி முதல் வடிவேலு வரை.. திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா ஆரூர்தாஸ் காலமானார்.!
இவருக்கு இரங்கல் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தமிழ் திரையுலகின் பிதாமகர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ் திரையுலக வரலாற்றில் அவர் செய்த சாதனைகள் அளப்பரியது. ஆயிரம் படங்களுக்கு மேல் தனது தமிழ் வசனங்களால் பெரும் புரட்சி செய்தவர் ஆரூர் தாஸ் ஐயா அவர்கள். அவரது வசனத்தில் வெளியான விதி படம் திரையை தாண்டி ஆடியோ கேசட்டுகளில் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததை யாராலும் மறக்க முடியாது.
தினத்தந்தி நாளிதழில் 50 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றை எழுதி தமிழ் திரைப்பட வரலாற்றையே பதிவு செய்த அயராத உழைப்பாளி ஆரூர் தாஸ் ஐயா அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கரங்களால் கலைமாமணி விருதை பெற்றவர். தமிழக அரசு சார்பில் கலைஞர் நினைவாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான கலைத்துறை வித்தகர் விருதை முதலில் பெற்ற சாதனைக்கு சொந்தக்காரர் என்பது தமிழ் திரைத்துறைக்கே கிடைத்த பெருமை.
ஆரூர் தாஸ் ஐயா அவர்கள் மறைந்தாலும் அவரது ஆழமான வசனங்களால் தமிழ் திரைத்துறை இருக்கும் வரை அவர் புகழ் நீடித்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் ,தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம், (M.நாசர்)
தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம்." என அந்த அறிக்கையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள நாதமுனி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | போடு.! மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படம்.. டைட்டிலுடன் வெளியான அறிவிப்பு.!