கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதில் எந்த தவறும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டு சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு ஆகியவற்றை குறித்து பேசியது தமிழக அரசியலில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
எச்.ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வண்மையாக கண்டித்த நிலையில், சீமான் சூர்யாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். சீமான் கூறியதாவது…
புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது. இது அடிப்படை உரிமை. நான் பல ஆண்டுகளாக பேசுவதைத்தான் சூர்யா பேசியுள்ளார். அவர் பேசியதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைய வேண்டும்.
சினிமா துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும் போது சூர்யா தன் மனதில் பட்டதை தைரியமாக பேசியுள்ளார். சூர்யா கேட்கும் கேள்விகளில் இருக்கும் நியாயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.
கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். ஆனால் சமச்சீர் கல்வி முறை என்பது இல்லை. கிராம பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே தகுதி தேர்வு நேர்மையானதல்ல.
இது சம வாய்ப்பும் இல்லை. இதைத்தான் சூர்யா வெளிப்படுத்தியுள்ளார். புதிய கல்விக்கொள்கையை ஏற்கவே முடியாது என சீமான் பேசினார்.