இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் 2006 ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இதன் இரண்டாவது பாகமாக ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. பிரம்மாண்ட செட் அமைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ள மறுத்தார்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், வடிவேலுவால் 7 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். எனவே வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு போடப்பட்டது. இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படமும் பாதியிலேயே நின்று போனது.
நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்ட ரெட் கார்டு சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டு இருக்கும் நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார். அந்த படத்திற்கு 'நாய் சேகர்' என பெயர் வைப்பதாக வடிவேலு அறிவித்தார். இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தலைநகரம், மருதமலை படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய தலைநகரம் படத்தில் தான் புகழ்பெற்ற நாய் சேகர் கதாபாத்திரம் உருவானது.
இந்நிலையில் இந்த நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்காக பதிவு செய்துள்ளதாகவும் எனவே வடிவேலு நடிக்கும் படத்திற்கு இந்த டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சதீஷ் நடிக்கும் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பும் முடியும் தருவாயில், படத்தின் முக்கிய கதாபாத்திரமாக ஒரு நாய் நடிப்பதால் இந்த டைட்டிலை விட்டுக்கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.