நடிகர் சித்தார்த் அண்மை காலமாக அரசியல் கருத்துக்களை பதிவிட்டு வருவதும், அரசின் செயல்பாடுகளில் சிலவற்றை விமர்சித்து வருவதும் பிரபலமாக இருக்கிறது.
குறிப்பாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பற்றி கூறிய கருத்தை விமர்சிக்கும் வகையில் சித்தார்த், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து இன்னும் சர்ச்சையை கிளப்பியது. அதில், “முதல்வரோ, சாமியாரோ, சாமானிய மனிதரோ பொய் சொன்னால் யாராக இருந்தாலும் அறை விழுவதை சந்திக்க வேண்டியது வரும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் உ.பி.முதல்வரை அவதூறாக பேசியதற்காக சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே நடிகர் சித்தார்த் தமது குடும்பத்தினருக்கு 500க்கும் மேற்பட்ட போன் கால்கள் வருவதாகவும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் குறிப்பிட்டதுடன் அதுபற்றி போலீஸாரிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே தற்போது, சித்தார்த்துக்கும் அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபற்றி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சித்தார்த், “பாதுகாப்பு அளிக்கும் தமிழ்நாடு போலீஸ்க்கு நன்றி. என் குடும்ப வரலாற்றில் நான் தான் முதல் முறையாக இப்படிகாவல்துறையினரால் பாதுகாப்பு வழங்கப்படுகிறேன்.
அத்துடன் தன் அம்மா பயந்திருப்பதாகவும், அவருக்கு ஊக்கம் தருவதற்காக மக்கள் சிலரது ட்வீட்களை அவரிடம் படித்துக் காண்பித்ததாகவும் குறிப்பிட்டு நன்றி சொன்ன சித்தார்த், “எளிமையான பின்னணியில் உள்ள சாதாரண மனிதர்கள் தான் நாங்கள். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு உலகம் போன்றது” என தெரிவித்துளார்.