இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடித்து வரும் திரைப்படம் 'அன்பறிவு'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி, 'நான் சிரித்தால்' படத்தில் நடித்திருந்ததைத் தொடர்ந்து, 'சிவகுமாரின் சபதம்' படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஹிப் ஹாப் தமிழா நாயகனாக நடிக்கும் அடுத்த படம் 'அன்பறிவு'.
சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநரிடம், அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார், ஊர்வதி, சங்கீதா க்ரிஷ், தீனா உள்ளிட்ட பலர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்து வருகிறார்கள்.
'அன்பறிவு' படத்தின் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ப்ரதீப் ராகவ், இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் கதையை ஹிப் ஹாப் ஆதி எழுதியுள்ளார். இந்நிலையில் பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர் முத்துச்சிற்பி இந்த படத்துக்காக ஒரு பாடலை பாடியுள்ளார். அவருடனான புகைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா ஆதி பகிர்ந்துள்ளார்.
மேடை நாடகங்களில் பாடகராக திகழ்ந்த முத்துச்சிற்பி தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே பிரபலமானார். பழம்பெரும் பாடகர்களான சீர்காழி கோவிந்தன் உள்ளிட்டோரின் பாடல்கள் போல இன்றைய பாடகர்கள் இல்லை எனும் குறையை முத்துச்சிற்பி போக்குவதாக பலரும் இவரை குறிப்பிட்டு வந்த நிலையில், விஜய் டிவியில் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் முத்துச்சிற்பி பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.