பொதுவாகவே ஒரு நகரில் உள்ள தெருக்களுக்கோ ஏரியாவுக்கோ அல்லது முக்கிய பகுதிக்கோ அரசியல் தலைவர்களின் பெயர்களை அல்லது வாழ்ந்து மறைந்த பிரபலங்களின் பெயர்களை சூட்டி கௌரவிப்பார்கள்.
வெகு சில மனிதர்களுக்கு மட்டும்தான், அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களின் பெயர்களை அவர்கள் பிறந்த நாட்டில் உள்ள நகர்களுக்கு சூட்டி கௌரவிக்கும் பெருமைகள் கிடைக்கும். அந்த வகையில் இந்திய இசையமைப்பாளரான ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானைக் கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் ஒரு தெருவுக்கு வைக்கப்பட்டுள்ளது. முன்பே சொன்னது போல் இது பெருமை மிக்க தருணம் என்றாலும், இதில் கூடுதல் பெருமையும் சிறப்பும் என்னவென்றால், ரஹ்மானின் பெயர் சூட்டப்படுவது கனடா நாட்டில் உள்ள 'Markham' எனும் நகரத்தில் உள்ள தெருவுக்கு என்பதுதான்.
ஆம், கனடா அரசு தங்களது நாட்டில் உள்ள 'Markham' எனும் நகரத்தின் ஒரு தெருவுக்கு 'ஏ.ஆர்.ரஹ்மான் தெரு' (A.R.Rahman street) எனப் பெயர் சூட்டி அவரை மட்டுமல்லாது இந்தியர்களையும் பெருமைப்படுத்தியுள்ளதாகவும், அதற்கு காரணமான ஏ.ஆர்.ரஹ்மானையும் பலரும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு 'அல்லா ரக்கா ரஹ்மான்' என ஏ.ஆர். ரஹ்மான் பெயரை கனாடா அரசு ஏற்கனவே ஒரு தெருவுக்குச் சூட்டியிருந்த நிலையில், தற்போது மீண்டும் 2வது முறையாக ஏ.ஆர். ரஹ்மானின் பெயரை தங்களது நாட்டின் தெருவுக்கு சூட்டி கௌரவப்படுத்தியுள்ளது.
இது குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தம் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், அவர், "இதை நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. இதற்காக கனடாவின் Markham மேயர், கவுன்சிலர்கள், இந்தியத் தூதரக ஜெனரல், கனடா மக்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி. உண்மையில் 'ஏ.ஆர். ரஹ்மான்' எனக்குச் சொந்தமான பெயர் மட்டுமல்ல. இந்த பெயரின் அர்த்தம் 'கருணையாளர்' என்பதுதான். நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான இறைவனின் குணம்தான் இது. அந்த கருணையாளர் இறைவன் தான். நாம் அந்த இறைவனின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும். ஆக, கனடாவில் வாழும் மக்களுக்கும் இந்த பெயர் அமைதி, வளம், சந்தோஷம், ஆரோக்கியத்தை தரட்டும். கடவுள் ஆசிர்வதிப்பாராக!
அத்துடன் இத்தகை அனைத்து அன்புக்கும் இந்திய சகோதர சகோதரிகளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், மூத்த கலைஞர்களும் இந்த நூறாண்டு சினிமாவை கொண்டாடவும், எழுச்சி பெறவும் எனக்கு ஊன்றுகோலாய் இருந்து உத்வேகத்தை தந்தவர்கள்தான், நான் அந்த பெருங்கடலின் ஒரு சிறிய துளியே.
எனக்கு வழங்கப்பெற்றுள்ள இக்கெளரவம், இன்னும் பலவற்றை புதிதாக நான் செய்ய, எனக்கு ஊக்கமளித்து உந்துதலாகவும் கூடுதல் பொறுப்பைத் தரவல்லதாகவும் இருக்கும் என உணர்கிறேன். சோர்வின்றி, ஓய்வின்றி இன்னும் சிறப்பாக பணிபுரிவேன். அப்படியே சோர்வு உண்டானாலும், எனக்காக கடமைகள் நிறையவே இருக்கின்றன. மக்கள் அனைவரையும் எல்லைகளைக் கடந்து இணைக்க வேண்டும் என்பதை எப்போதுமே நினைவில் கொண்டிருப்பேன். எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.